தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ளது. இதனால் தேர்தல் களம் இப்போதே அனல் பறக்க தொடங்கிவிட்டது. 2026 சட்டமன்ற தேர்தலில் பலமுனை போட்டி ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. திமுக கூட்டணி ஒருபக்கம் வலுவாக உள்ளது. மற்றொரு பக்கம் எதிர்க்கட்சியான அதிமுக மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது.
அரசியலுக்கு புதிதாக என்ட்ரி கொடுத்துள்ள நடிகர் விஜய் தலைமையிலான தவெக தனித்து களமிறங்கவே அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. வழக்கம் போல சீமானின் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடவே அதிக சான்ஸ் உள்ளது. இப்படி பலமுனை போட்டி ஏற்படும் நிலை உள்ள நிலையில், தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளில் யார் வெல்லப்போகிறார்கள் என்பதில் மூத்த பத்திரிகையாளர் வம்சி சந்திரன் கணிப்பு வெளியிட்டுள்ளார்.
அதன்படி, தற்போதைய அரசியல் நிலவரத்தில் திமுக கூட்டணி 154 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இதில் 126 இடங்களில் உறுதியான வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது. மேலும் 28 இடங்களில் கடுமையான போட்டி நிலவினும், வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், அதிமுக கூட்டணி 80 இடங்களில் முன்னிலையில் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. இதில் 48 இடங்களில் வெற்றி உறுதியாக இருக்கிறது. மீதமுள்ள 32 இடங்களில் கடுமையான போட்டி நிலவுகிறது. மொத்தத்தில் 60 தொகுதிகளில் (திமுக கூட்டணிக்கு 28, அதிமுக கூட்டணிக்கு 32) கடுமையான போட்டி நிலவி, அவற்றின் முடிவுகள் தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கக்கூடியவையாக இருக்கும்.
இதேவேளை, அக்னி நியூஸ் மேற்கொண்ட மற்றொரு கருத்துக்கணிப்பில், திமுக கூட்டணி 164 இடங்களில் வெற்றி பெறும் எனவும், அதிமுக கூட்டணி வெறும் 70 இடங்களில் மட்டுமே வெல்லும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்தக் கணிப்பு 21,150 பேரிடம் பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் தொகுக்கப்பட்டதாகும். அந்த கணிப்பில், மாநில அரசின் செயல்பாடுகளில் 49% மக்கள் திருப்தி அடைந்துள்ளதாகவும், 17% பேர் ஓரளவு திருப்தி அடைந்துள்ளதாகவும், 34% பேர் அதிருப்தி தெரிவித்துள்ளதாகவும் தெரியவந்தது.
இதனால், வரவிருக்கும் 2026 சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணி வலுவான நிலைப்பாடு பெறும் எனவும், அதிமுக கூட்டணி பின்னடைவைச் சந்திக்கும் அபாயத்தில் இருப்பதாகவும் இந்த கருத்துக்கணிப்புகள் வெளிப்படுத்துகின்றன. இதனால், தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
Read more: பலி எண்ணிக்கை 250ஆக உயர்வு.. 500 பேர் காயம்! ஆப்கானிஸ்தானை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம்..