அம்பானிக்காகத்தான் பிரதமர் மோடி, ரஷ்யாவுடன் உறவை தொடர்வதாக விசிக தலைவர் திருமாவளவன் குற்றச்சாட்டியுள்ளார்.
அமெரிக்கா இந்தியாவுக்கு விதித்துள்ள 50 சதவீத வரி விதிப்புக்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி, திருப்பூரில் இன்று திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியதாவது: “இந்த ஆர்ப்பாட்டம் அமெரிக்க அதிபர் டிரம்ப் எதிராக நடைபெறுகிறது.
ஆனால் இது பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக நடைபெற வேண்டிய ஒன்று. மோடி தனது நண்பர்களான அம்பானி, அதானி போன்றவர்களுக்காக வெளியுறவு கொள்கையை அமைத்துள்ளார். ரஷியா–உக்ரைன் போர் நிலவரத்தில், ரஷியாவுடன் வாணிபம் நடைபெறக் கூடாது என்று அமெரிக்கா கூறுகிறது. ஆனால், அம்பானி ரஷியாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்குகிறார்.
இதற்கான ஒப்பந்தத்தை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நடத்தி தருகிறார். இந்தியாவில் பெட்ரோல் விலை அதிகமாக இருந்தும், அந்த கச்சா எண்ணெய் ஐரோப்பாவில் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் கிடைக்கும் லாபம் முழுமையாக அம்பானிக்கே சென்றுசேருகிறது. பொதுமக்கள் எந்த நன்மையும் பெறவில்லை.
ஜவுளி, இறால் ஏற்றுமதி, நவரத்தினங்கள் உள்ளிட்ட பல தொழில்கள் இந்த வரியால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த பிரச்சனைக்கு எளிய தீர்வு அதானி கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும். இந்த வரி விதிப்பால் பெரிய முதலாளிகள் பாதிக்கப்படமாட்டார்கள். ஏழை மக்கள் மற்றும் சிறு தொழிலாளர்கள்தான் சிக்கலில் சிக்குவார்கள் என வலியுறுத்தினார்.
மேலும், “மோடி அரசின் தவறான பொருளாதார கொள்கையால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். சனாதன அரசியலை திணிக்கிறார்கள், மதவெறியை தூண்டுகிறார்கள். ஆனால் தமிழகத்தில் பா.ஜ.க. ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை. மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தான் மக்களுக்கு பாதுகாப்பு அரண். அதனால், மு.க. ஸ்டாலினுடன் கைகோர்த்து நிற்பது எங்கள் கடமை. இந்தியாவிற்கு வழிகாட்டியாக தமிழகம் செயல்பட வேண்டும்” என்றார்.
Read more: அதிமுகவில் மீண்டும் சசிகலா, ஓபிஎஸ், தினகரன்? செங்கோட்டையனின் அதிரடி மூவ்.. நெருக்கடியில் இபிஎஸ்!