குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் சட்டம், 2025ன் கீழ், இந்திய உள்துறை அமைச்சகம் (MHA) முக்கிய உத்தரவை வெளியிட்டுள்ளது. இதன் படி, நேபாளம் மற்றும் பூட்டான் குடிமக்கள் பாஸ்போர்ட் அல்லது விசா இல்லாமல் இந்தியாவிற்கு நுழையலாம். இந்த விலக்கு, நிலம் மற்றும் வான்வழி பயணிகளுக்கு, நேபாளம்/பூட்டானில் இருந்து திரும்பும் இந்தியர்களுக்கு, அரசுப் பணிக்காகப் பயணிக்கும் இந்திய ஆயுதப்படை வீரர்கள் மற்றும் குடும்பத்தினருக்கும் பொருந்தும்.
இருப்பினும் நேபாளம் மற்றும் பூட்டான் குடிமக்கள் பாஸ்போர்ட், குடியுரிமைச் சான்றிதழ் அல்லது தேர்தல் ஆணையம் வழங்கிய வாக்காளர் அடையாள அட்டை போன்ற அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களை வைத்திருக்க வேண்டும். 10 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் பெற்றோருடன் செல்லும் போது பள்ளி புகைப்பட அடையாள அட்டை பயன்படுத்தலாம்; 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு எந்த ஆவணமும் தேவையில்லை.
இதற்கிடையில், 1959 முதல் 2003 வரை சிறப்பு அனுமதியுடன் இந்தியாவிற்கு வந்த திபெத்திய அகதிகளுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. மேலும், டிசம்பர் 31, 2024க்குள் இந்தியாவை அடைந்த ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசத்திலிருந்து வந்த சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்கள் அவர்களிடம் செல்லுபடியாகும் ஆவணங்கள் இருந்தாலோ இல்லையோ பாதுகாப்பு பெறுவார்கள். ஆனால் ஜனவரி 9, 2015க்கு முன்பு இந்தியாவை அடைந்த இலங்கை தமிழ் அகதிகள் இந்த விதியின் கீழ் வரமாட்டார்கள் என அமைச்சகம் தெரிவித்துள்ளது.