தமிழகத்தில் புதிய நோய் தொற்று ஏதுமில்லை என்பதால் மாஸ்க் அணிய வேண்டும் போன்ற பதற்றம் தேவையில்லை என்று மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்..
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது.. குறிப்பாக சென்னை, கோவை, தென் மாவட்டங்கள் என பல இடங்களில் அவ்வப்போது கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.. பகல் நேரத்தில் வெயில் வெளுத்து வாங்கும் நிலையில் மாலை அல்லது இரவில் மழையும் பெய்து வருகிறது. இந்த திடீர் காலநிலை மாற்றம் சளி, காய்ச்சல் போன்ற பருவகால நோய் பாதிப்பை அதிகரித்துள்ளது..
சென்னையில் கடந்த சில நாட்களில் சளி, காய்ச்சல், தொண்டை வலி, தலைவலி, இருமல் போன்ற நோய்களால் பலரும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.. இதனால் சிகிச்சையில் பெறுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வந்தது..
இதை தொடர்ந்து தமிழ்நாட்டில் கடந்த 2 வாரங்களாக வைரஸ் காய்ச்சல் அதிகரித்துள்ளதால் மாஸ்க் அணியுமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தியது.. குறிப்பாக வயதானவர்கள், நோயெதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் மக்கள் அதிகமாக கூடும் செல்வதை தவிர்க்க வேண்டும்.. மற்றவர்களும் கூட்ட நெரிசல் மிக்க இடங்களுக்கு செல்லும் போது கவனமாக இருக்கவும், முகக்கவசம் அணியவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் வைரஸ் காய்ச்சல் எதிரொலியாக மாவட்ட மருத்துவ அதிகாரிகளுக்கு சுகாதாரத்துறை அறிவுரை வழங்கி உள்ளது.. மாநிலம் முழுவதும் வைரஸ் காய்ச்சல் பரவல் தன்மையை தீவிரமாக கண்காணிக்க சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.. மருத்துவமனைகளை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திருக்க வேண்டுமென மாவட்ட மருத்துவ அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது..
மேலும் வைரஸ் பரவல் அதிகரித்துள்ள பகுதிகளில் நகராட்சி உடன் இணைந்து சுற்றுப்புற தூய்மை அதிகரிக்க, கொசு பரவலைக் கட்டுப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.. மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர்களின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது..
சளி, காய்ச்சல், இருமல், தொண்டைவலி அறிகுறி உள்ளவர்களின் மாதிரிகளை பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.. காய்ச்சல் அறிகுறி இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவும், அடிக்கடி கைகளை கழுவவும் சுகாதாரத்துறை அறிவுரை வழங்கி உள்ளது.. எனினும் இந்த வைரஸ் காய்ச்சல் பரவல் தொடர்பாக யாரும் பீதியடைய வேண்டாம் எனவும் தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது..
இந்த நிலையில் தமிழகத்தில் புதிய நோய் தொற்று ஏதுமில்லை என்பதால் மாஸ்க் அணிய வேண்டும் போன்ற பதற்றம் தேவையில்லை என்று மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.. தமிழகத்தில் தற்போது பருவமழை கால நோய் தொற்று பாதிப்பு தான் உள்ளது; எனவே பதற்றம் தேவையில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்..
தமிழ்நாட்டில் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்ற வதந்தி பரவுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.. மேலும் தமிழகத்தில் இதுவரை யாருக்கும் மூளையை தின்னும் அமீபா பாதிப்பு ஏற்படவில்லை என்றும் அமைச்சர் உறுதிப்படுத்தினார்.



