அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது முன்னாள் அமைச்சர் அதிருப்தியில் இருப்பதாக கடந்த சில மாதங்களாகவே தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.. இபிஎஸ்-ஐ விட சீனியராக இருந்தும் தனக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை என்றும் கட்சியில் தான் தொடர்ந்து ஓரங்கட்டப்படுவதாகவும் செங்கோட்டையன் உச்சக்கட்ட அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.. அதே போல் கொங்கு மண்டல அதிமுக நிகழ்ச்சிகளில் புறக்கணிக்கப்பட்டதால் அவர் விரக்தியில் இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன..
குறிப்பாக கொங்கு பகுதியில் அத்திக்கடவு அவினாசி தொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா நடந்தது.. இந்த விழாவின் பேனரில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா புகைப்படங்கள் இடம்பெறவில்லை என்று பொதுவெளியில் ஆதங்கமாக தெரிவித்திருந்தார்.
அப்போது முதலே இபிஎஸ் – செங்கோட்டையன் விவகாரம் பேசு பொருளானது.. மேலும் செங்கோட்டையன் டெல்லி சென்று பாஜக மேலிடத்தை சந்தித்து பேசி வந்தார்.. மேலும் எடப்பாடி பழனிசாமியை ஓரங்கட்டிவிட்டு, செங்கோட்டையனை தலைமை பொறுப்புக்கு கொண்டு வர பாஜக முயற்சிப்பதாக கூறப்பட்டது.. இதனால் அவர் தான் அதிமுக பொதுச்செயலாளர், என்று கூட கூறப்பட்டது.
இந்த சூழலில் கடந்த 2-ம் தேதி ஈரோடு கோபிச்செட்டிபாளையம் அருகே தனது ஆதரவாளர்களுடன் செங்கோட்டையன் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.. இதை தொடர்ந்து 5-ம் தேதி மனம் திறந்து பேச இருப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார்..
அவர் என்ன பேசுவார் என்ற எதிர்ப்பார்ப்பு நிலவிய நிலையில், என்.டி.ஏ கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக டிடிவி தினகரன் நேற்று முன் தினம் அறிவித்தார்.. துரோகத்தின் காரணமாகவே தான் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாகவும் அவர் கூறியிருந்தார்.. ஓபிஎஸ்-ஐ தொடர்ந்து டிடிவி தினகரனும் என்.டி.ஏ கூட்டணியில் இருந்து விலகியது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது..
இப்படி பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.. முன்னதாக, கோபியில் உள்ள அதிமுக அலுவலகத்திற்கு திறந்தவெளி வேனில் செங்கோட்டையன் வருகை தந்தார்.. அந்த வேனில் அண்ணா, எம்.ஜி.ஆர். ஜெயலலிதா ஆகியோரின் படங்கள் இடம்பெற்றிருந்ததன.. அந்த வாகனத்தில் தற்போதைய பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் படம் இல்லை.. கிட்டத்தட்ட தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்வது போல் அவர் வந்த போது ஏராளமான அதிமுக தொண்டர்கள் அங்கு கூடியிருந்தனர்.. சசிகலா ஆதரவாளர்களும் அங்கு வந்திருந்தனர்..
அப்போது பேசிய அவர் “ 1972-ல் புரட்சி தலைவரால் தொடங்கப்பட்ட இயக்கம் தான் அதிமுக.. கிளைக் கழக செயலாளராக கட்சியில் எனது பணியை தொடங்கினேன். 1973-ல் திண்டுக்கல் நாடாளுமன்ற தேர்தல் நடந்த போது, மாபெரும் வெற்றி பெற்றார்..
1977-ல் கோவையில் பொதுக்குழு நடந்தது.. அப்போது என்னை பொருளாளராக நியமித்து பொதுக்குழுவை நடத்த வேண்டும் என எனக்கு எம்.ஜி.ஆர் சார்பில் எனக்கு உத்தரவிடப்பட்டது.. இதையடுத்து சத்யா ஸ்டூடியோஸ்க்கு அழைத்து என்னை எம்.ஜி.ஆர் பாராட்டினார்..
நாடே போற்றும் தலைவராக, மக்கள் மனதில் குடியிருக்கும் தலைவராக எம்.ஜி.ஆர் விளங்கினார்.. இந்தியாவிலேயே சிறந்த முதலமைச்சராக விளங்கினார்.. புரட்சி தலைவரின் மறைவுக்கு புரட்சி தலைவி அம்மா பொறுப்பேற்றார்கள்.. நாங்கள் எல்லோரும் அம்மாவிடம் சென்று பொறுப்பேற்க வேண்டும் என வேண்டுகோள் வைத்தோம்.. அம்மா அவர்கள் சிறந்த ஆட்சியை தமிழகத்திற்கு தந்தார்.. ஒரு சிறந்த, ஆளுமைமிக்க முதலமைச்சராக தமிழகத்தில் வலம் வந்தார்.. 5 முறை முதலமைச்சராக இருந்து அனைத்து தரப்பு மக்களின் மனதில் இடம்பெற்றிருந்தார்.. ஆன்மீகவாதிகளும், திராவிடவாதிகளும் ஏற்றுக்கொள்ளும் தலைமையாக அம்மா விளங்கினார்..
இந்த இயக்கத்தை பொறுத்த வரை, ஏழை எளிய மக்கள், படித்தவர்கள், தொண்டர்களுக்காக உருவாக்கப்பட்ட இயக்கம்.. அம்மா மறைவுக்கு பிறகு இந்த இயக்கத்தில் பல்வேறு சோதனைகள் வந்த போது, அன்று எல்லோரும் சேர்ந்து இந்த இயக்கம் உடைந்துவிடக்கூடாது, இயக்கத்தை பேணி காக்க வேண்டும் என்ற முறையில் சசிகலாவை நாங்கள் ஒருமனதாக நியமித்தோம்..
அதன்பின்னர் காலச்சக்கரம் சுழன்ற நிலையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி தலைமையேற்றார்.. அதிமுக தொண்டர்களுக்காக எந்த தியாகத்தையும் செய்ய நான் தயாராக இருந்தேன்.. எனக்கு 2 வாய்ப்புகள் கிடைத்த போது கூட கட்சி உடைந்துவிடக் கூடாது என்பதற்காக நான் பணியாற்றினேன்..
2016-க்கு பிறகு தொடர்ந்து தேர்தலை சந்திக்கிறோம்.. தேர்தல் களம் என்பது போராட்டக் களம்.. 2019, 2021, 2024 தேர்தல்கள், உள்ளாட்சி தேர்தல்களை சந்தித்த போது பல்வேறு பிரச்சனைகள் சந்தித்தோம்.. 2024 மக்களவை தேர்தலில் பாஜக உடன் கூட்டணி அமைத்திருந்தால் 30 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க முடியும் என்று நாங்கள் இபிஎஸ்-இடம் கூறினோம்..
கட்சி தொய்வாக இருக்கிறது.. வெளியேற்றியவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என மூத்த தலைவர்கள் 6 பேரும் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தோம்.. ஆனால் எங்கள் கருத்தை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் அவர் இல்லை.. மறப்போம்.. மன்னிப்போம்.. வெளியே சென்றவர்களை அரவணைத்தால் மட்டும் தான் நாம் வெற்றி பெற முடியும்.. இது தான் நம் தலைவர்கள் சொல்லிக் கொடுத்த பாடம்..
எனவே வெளியே சென்றவர்களை அரவணைக்க வெண்டும்.. எந்த நிபந்தனையும் இல்லை எங்களை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று ஓபிஎஸ் தரப்பு கூறுகிறது.. ஆட்சி மாற்றம் தேவைப்படும் போது, வெளியே சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும்.. அப்படி செய்யும் போது தான் வெற்றி கிடைக்கும்.. வெற்றி வாகை சூடுவதற்கு, வெளியே சென்றவர்களை நம் கழகத்தில் இணைத்துக் கொள்ளுங்கள்.. எந்த பொறுப்பும் தேவையில்லை என்று அவர்கள் சொல்லும் போது அவர்களை அரவணைப்பதே நல்ல முடிவாக இருக்கும்.. அது விரைவில் முடிக்கப்பட வேண்டும்.. அப்படி விரைந்து முடிவெடுக்க முடியவில்லை நாங்கள் அந்த பணிகளை மேற்கொள்வோம்.. அதனை ஒருங்கிணைந்து செயல்படுத்த தயாராக இருக்கிறோம்.. அப்படி செய்யவில்லை எனில் இபிஎஸ்- ன் சுற்றுப் பயணத்தில் நான் பங்கேற்க மாட்டேன்..” என்று தெரிவித்தார்..
தொடர்ந்து பேசிய அவர் “ யார், யார் கட்சியில் இணைக்கப்பட வேண்டும் என்பதை பொதுச்செயலாளர் முடிவு செய்யலாம்.. முக்கிய பொறுப்பில் இருந்தவர்கள் அதிமுகவில் இணைக்கப்பட வேண்டும் என்பது தான் என் நோக்கம்.. தென் மாவட்டம் நிலவரம் அனைவருக்கும் தெரியும்.. ஒன்றிணைத்தால் மட்டுமே வெற்றி..” என்று தெரிவித்தார்..
பொதுச்செயலாளர் பதவிக்கு முயற்சி செய்வீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர் “ எனது கருத்தை நான் கூறிவிட்டேன்.. 10 நாட்களில் முயற்சி எடுக்கவில்லை எனில், இதே மனநிலையில் உள்ளவர்களை திரட்டி முயற்சி எடுக்கப்படும்.. என்னை பொறுத்த வரை இந்த இயக்கத்திற்கு எந்த தியாகத்தையும் செய்ய வேண்டும் என தயாராக இருக்கிறேன்.. இந்த இயக்கம் உயிரோட்டம் உள்ள இயக்கமாக இருக்க வேண்டும்.. அதற்காக தான் இந்த பணிகளை தொடங்கி இருக்கிறேன்.. அவ்வளவு தான்..” என்று தெரிவித்தார்..