டிஜிபி அலுவலக வாசலில் விசிக நிர்வாகிகளை கத்தியை வைத்து தாக்கியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஏர்போர்ட் மூர்த்தியை மெரினா காவல்துறையின் கைது நடவடிக்கைக்கு சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
புரட்சி தமிழகம் கட்சித் தலைவரான ஏர்போர்ட் மூர்த்தி விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை சமூக ஊடகங்களில் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இந்நிலையில் அண்மையில், சென்னை கடற்கரை சாலையில் உள்ள டி.ஜி.பி. அலுவலகம் அருகில் வைத்து ஏர்போர்ட் மூர்த்தி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இடையே திடீர் மோதல் வெடித்தது. விசிகவை சேர்ந்தவர்கள் சரமாரியாக ஏர்போர்ட் மூர்த்தி மீது தாக்குதலில் ஈடுபட்டனர். பதிலுக்கு ஏர்போர்ட் மூர்த்தியும் பதிலுக்கு தாக்குதலில் ஈடுபட்டார்.
இதற்கிடையே ஏர்போர்ட் மூர்த்தி பாக்கெட் கத்தியால் தங்கள் கட்சியினரை தாக்கியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. தாக்குதலில் விசிக-வினர் 2 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர் என்றும் ஏர்போர்ட் மூர்த்தி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தனர். இந்நிலையில் டிஜிபி அலுவலக வாசலில் விசிக நிர்வாகிகளை கத்தியை வைத்து தாக்கியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஏர்போர்ட் மூர்த்தியை மெரினா காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம்
இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில்; புரட்சித் தமிழகம் கட்சியின் தலைவர் அன்பிற்குரிய அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி அவர்களைக் கைது செய்திருக்கும் திமுக அரசின் செயற்பாடு அடாவடித்தனமானது. காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்திற்கு புகார்கொடுக்கச் சென்ற அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி மீது அதன் வாசலிலேயே வைத்து குண்டர்கள் தாக்குதல் தொடுத்ததும், தனியொரு ஆளாக நின்றவர் தற்காத்துக் கொள்ளவே முயன்றார் என்பதுமான காட்சிகள் காணொளிப்பதிவுகளாக ஊடகங்களில் வெளியானபோதும் பொய்வழக்கைப் புனைந்து, பாதிக்கப்பட்டவர் மீதே வழக்குத் தொடுத்துச் சிறைப்படுத்துவது அதிகார அத்துமீறலின் உச்சம்; வெளிப்படையான பாசிச வெறியாட்டம்! இதற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதிகாரத்திமிரிலும், பதவிப்போதையிலும் ஆட்டம்போடும் ஆட்சியாளர் பெருமக்களே! உங்களுக்கான நாட்கள் எண்ணப்படுகின்றன. உங்கள் அரசும், அதிகாரமும் வீழும் நாள் வெகுதொலைவில் இல்லை என தெரிவித்துள்ளார்.