நேபாளம் தலைநகர் காத்மாண்டு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் திங்களன்று சமூக ஊடகத் தடைக்கு எதிராக இளைஞர்கள் பெரும் போராட்டங்களை நடத்தினர். சமூக ஊடக தளங்களின் தடையை நீக்க வேண்டும் என்றும், நாட்டில் பரவியுள்ள ஊழல் கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
காத்மாண்டுவின் நியூ பனேஷ்வர் பகுதியில் நடந்த வன்முறை மோதல்களில் சுட்டுக் காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பலர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தோரின் அடையாளங்கள் வெளியாகவில்லை. டமாக்கில் போராட்டக்காரர்கள் நகராட்சி அலுவலகத்தை நோக்கி பேரணி நடத்தி, பிரதமர் கே.பி. சர்மா ஒலியின் உருவ பொம்மையை எரித்தனர்.
அலுவலக வாயில்களை உடைக்க முயன்ற போது, போலீசார் தண்ணீர் பீரங்கி, கண்ணீர் புகைக் குண்டுகள், ரப்பர் தோட்டாக்கள் பயன்படுத்தினர். இதில் ஒரு போராட்டக்காரர் படுகாயமடைந்தார். பல மோட்டார் சைக்கிள்கள் தீக்கிரையாகியதால் பதற்றம் அதிகரித்தது. போராட்டத்தில் பங்கேற்ற இளைஞர்கள் தேசியக் கொடிகளை அசைத்து, தேசிய கீதத்துடன் போராட்டத்தைத் தொடங்கினர்.
பின்னர் சமூக ஊடகத் தடைகள் மற்றும் ஊழலுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். பிரதமர் ஒலி தனது அரசாங்கத்தின் முடிவை ஆதரித்து, “நாங்கள் சமூக வலைத்தளங்களுக்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால் சட்டவிரோதம், ஆணவம், நாட்டை இழிவுபடுத்தும் செயல்களை மட்டுமே எதிர்க்கிறோம்” என்று வலியுறுத்தினார்.
முன்னதாக எடுத்த நடவடிக்கைகள்: கடந்த மாதம் அமைச்சரவை, சமூக ஊடக நிறுவனங்களுக்கு நேபாள விதிகளுக்கு இணங்க ஏழு நாட்கள் அவகாசம் வழங்கியது. ஜூலை மாதம் டெலிகிராம் செயலி தடை செய்யப்பட்டது. கடந்த ஆண்டு டிக்டாக் மீது ஒன்பது மாதத் தடை விதிக்கப்பட்டது; பின்னர் நிறுவனம் விதிகளுக்கு இணங்கியதால் தடை நீக்கப்பட்டது.
தற்போது நேபாளம் முழுவதும் போராட்டங்கள் பரவி வருகின்றன. காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தியுள்ள நிலையில், சமூக ஊடகத் தடையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
Read more: Gmail நிரம்பிவிட்டதா..? இந்த ட்ரிக் யூஸ் பண்ணி ஈஸியா டெலிட் பண்ணலாம்..! 99% பேருக்கு தெரியாது..!