நவம்பர், டிசம்பர் மாதங்களில் சுமார் 1,000 முதல் 1,500 வரை டெங்கு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக அமைச்சர் மா. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம்; தமிழகத்தில் டெங்குவால் ஒவ்வொரு ஆண்டும் 7,000 முதல் 8,000 பேர் வரை பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதிகபட்சமாக டெங்கு பாதிப்பு என்பது 2012 ஆம் ஆண்டில் 66 இறப்புகளும், 13,000-க்கும் மேற்பட்டவர்கள் பாதிப்புக்கு உள்ளாக்கினர். 2017ஆம் ஆண்டு 65 இறப்புகளும், 23,000-க்கும் மேற்பட்டவர்களுக்கு பாதிப்புகளும் இருந்தன.
பருவமழை காலங்களில் ஆங்காங்கே தேங்கியிருக்கின்ற நன்னீரில் உருவாகும் ஏடிஸ் கொசுக்கள் மூலம் இது வருகின்றது. வீடுகளைச் சுற்றி உடைந்த பானைகள், வாழை மட்டைகள், உடைந்த ஓடுகள், டயர், டியூப் போன்ற பல பயன்பெறாத பொருட்களில் தேங்கி இருக்கும் நீரில் கூட ஏடிஎஸ் கொசுவானது உருவாகலாம். இது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாக அமைச்சர் கூறினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்; நவம்பர், டிசம்பர் மாதங்களில் சுமார் 1,000 முதல் 1,500 வரை பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. வடகிழக்கு பருவமழை ஆரம்பிக்கப்பட உள்ளது. மேலும் கடந்த சில மாதங்களாக வெப்பச்சலன மழை, கோடை மழை தொடர்ந்து கொண்டே இருக்கும் காரணத்தினால் நீர்த்தேக்கம் என்பது ஆங்காங்கே இருக்கிறது. இதனால், இந்த கொசு உற்பத்தி இருக்கிறது என்றாலும் அரசின் சார்பில் கொசுக்களை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக டெங்கு பாதிப்பு கட்டுக்குள் இருக்கிறது என்றார்.