மேல்மருவத்தூரில் உள்ள கோயில் கருவறைகளில் பெண்களும் வழிபாடு நடத்தலாம் என்ற நடைமுறையை கொண்டு வந்து செயல்படுத்தியவர் பங்காரு அடிகளார். சபரிமலை கோயிலை போல் ஆதிபராசக்தி கோயிலுக்கும் பெண்கள் மாலை அணிந்து செல்லலாம். ஆண்டுதோறும் தைப்பூச நாட்களில் பெண்கள் செவ்வாடை அணிந்துக் கொண்டு மருவத்தூர் செல்கிறார்கள். அவர்கள் கோயில் கருவறைக்குள் சென்று சுயம்பு அம்மனுக்கு அபிஷேகம் செய்கிறார்கள்.
அங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு சுடச்சுட அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. மாதவிடாய் காலத்தில் கூட பெண்கள் தெய்வத்திற்கு சேவைகளை செய்யலாம். அதனால் சக்தி ஒன்றும் போய்விடாது என்ற தத்துவத்தை உலகிற்கு சொன்னவர் பங்காரு அடிகளார். ஆன்மீக புரட்சியுடன் கல்வி புரட்சியையும் செய்துள்ளார். கடந்த ஒரு ஆண்டாகவே உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தார்.
சில நாட்களாக வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்தார் பங்காரு அடிகளார். இந்த நிலையில் நேற்று மாலை அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. பக்தர்களால் அம்மா என அழைக்கப்பட்டவர். வடதமிழகத்தில் முக்கிய ஆன்மீக குருவாக விளங்குகிறார் பங்காரு அடிகளார்.
1966ஆம் ஆண்டு ஒருநாள் பங்காரு அடிகளாரின் குடும்பத்தில் நடந்த விழா ஒன்றில் பங்காரு அடிகளாரை ஆதி பராசக்தி ஆட்கொண்டதாகவும், தீப ஆராதனை தட்டு ஒன்றை வளைத்து தனது சக்தியை வெளிப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதேபோல், பங்காரு அடிகளார் எப்படி சாமியராக மாறினார் என்பது தொடர்பான வீடியோவை அவரது ஓம் சக்தி என்ற யூடியூப் சேனலில் வெளியிட்டு உள்ளார்கள். அதில் கடந்த 1941 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3ம் தேதி கோபால நாயக்கர் – மீனாட்சி தம்பதிக்கு 2வது மகனாக பிறந்தார் பங்காரு அடிகளார். .
சிறு வயதிலேயே கடவுள் பக்தியுடன் வளர்ந்தவர் பங்காரு அடிகளார். இந்தநிலையில், ஒருநாள் பங்காரு அடிகளார் தனது அறையில் படுத்து உறங்கியபோது பாம்பு ஒன்று அவரது உடம்பில் ஊர்வதை உணர்ந்தார். உடனே விழித்த அவர், அந்த பாம்பு உடம்பை விட்டு இறங்கிச் சென்றதையடுத்து, தனது பெற்றோரை அழைத்து காட்டி உள்ளார். பாம்பை கண்ட பங்காரு அடிகளாரின் தாயார் கத்தி கூச்சலிட்டு உள்ளார். உடனே அக்கம்பக்கத்தின் அங்கு திரண்டனர். ஆனால், அந்த பாம்பு எங்கோ மறைந்து விட்டது. ஆதிபராசக்தி பாம்பு உருவத்தில் தோன்றி பங்காரு அடிகளாரை ஆட்கொண்ட நிகழ்வாக இது கூறப்படுகிறது.