கோ படம் மூலம் அறிமுகமாகி புகழ் பெற்ற கார்த்திகா சினிமா விட்டு ஒதுங்கி இருந்து வரும் நிலையில், விரைவில் திருமணம் செய்து கொள்ளவுள்ளார்.
தமிழ் சினிமா 1980-களில் டாப் ஹீரோயினாக இருந்தவர் ராதா. இவர், ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யாராஜ், பிரபு என அப்போது ஹீரோவாக இருந்த அனைவருடனும் ஜோடி போட்டுள்ளார்.
ராதாவின் மூத்த மகளான கார்த்திகா, தமிழில் மறைந்த இயக்குநர் கே.வி. ஆனந்த் இயக்கிய கோ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இதில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து தமிழில் அன்னக்கொடி, புறம்போக்கு என்கிற பொதுவுடமை தெலுங்கில் ஒரு சில படங்களில் நடித்தார். பின்னர் வாயப்புகள் கிடைக்காத நிலையில், சினிமாவில் இருந்து ஒதுங்கினார். தொடர்ந்து தந்தையுடன் பிஸினஸை கவனித்து வந்த கார்த்திகா விரைவில் திருமணம் செய்து கொள்ளவுள்ளார் என தெரியவந்துள்ளது. இதைப்பற்றி இன்ஸ்டாவில் அவரே மறைமுகமாக வெளிப்படுத்தியுள்ளார்.
அவர் பகிர்ந்திருக்கும் இன்ஸ்டா பதிவில், கையில் நிச்சயதார்த்தம் மோதிரம் அணிந்து, ஒரு நபரை கட்டியணைத்தவாறு இருக்கிறார். இதில் கார்த்திகா மற்றும் அவருடன் இருக்கும் நபரின் புகைப்படம் அவுட்போக்கஸாக உள்ளது. இதன்மூலம் கார்த்திகாவுக்கு திருமண நிச்சாயதார்த்தம் நடைபெற்றிருப்பது உறுதியாகியுள்ளது. ஆனால், அவர் தனது வருங்கால கணவர் பற்றி எந்தவொரு தகவலும் தெரிவிக்கவில்லை. இவரது இந்த பதிவு வைரலாகி வரும் நிலையில், விரைவில் திருமணம் குறித்தும் முறையான அறிவிப்பை அவர் தெரிவிப்பார் என்று கூறப்படுகிறது.
கார்த்திகாவின் சகோதரியான துளசி நாயரும் ஹீரோயினாக நடித்துள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த கடல் படத்தில் அறிமுகமான துளசி, பின்னர் தமிழில் ஜீவா ஜோடியாக யான் என்ற படத்தில் நடித்தார். அதன்பின்னர் துளசியும் நடிப்புக்கு டாட்டா காட்டிவிட்டு சென்றார். சகோதரிகளான கார்த்திகா, துளசி என இருவருடனும் ஜோடி சேர்ந்த ஒரே நடிகராக ஜீவா உள்ளார்.