கடந்தாண்டு பிரிட்டனில் சில வார இடைவெளியில் 2 பிரதமர்கள் விலகிய நிலையில், அப்போது அங்கே அரசியல் ரீதியாக மிகப் பெரிய குழப்பம் ஏற்பட்டது. அப்போது, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் பிரிட்டன் பிரதமராகப் பொறுப்பேற்றார். இளம் வயது பிரதமர், முதல் இந்து பிரதமர் எனப் பல சிறப்புகளை இவர் பெற்றார். பிரிட்டன் கடுமையான நெருக்கடியில் சிக்கித் தவித்த நிலையில், அதைச் சரி செய்ய பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தார்.
இந்நிலையில், பிரிட்டனின் மிட் பெட்ஃபோா்ட்ஷைர், டாம்வொா்த் ஆகிய இரு நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்ற தோ்தலில் பிரதமா் ரிஷி சுனக் தலைமையிலான ஆளும் கன்சா்வேட்டிவ் கட்சி தோல்வி அடைந்தது. அந்த இரு தொகுதிகளையும் எதிா்க்கட்சியான தொழிலாளா் கட்சி வெற்றி பெற்றது.
பிரிட்டனில் பொதுத்தோ்தலுக்கு முன்னா் நடைபெறும் இடைத் தோ்தல்கள் அரசின் செயல்பாடுகள் குறித்து நடத்தப்படும் பொதுவாக்கெடுப்பாகப் பாா்க்கப்படுகிறது. இந்நிலையில், கன்சா்வேட்டிவ் கட்சியின் கோட்டையாகக் கருதப்படும் இந்த இரு தொகுதிகளையும் தொழிலாளா் கட்சி கைப்பற்றியிருப்பது பிரதமா் ரிஷி சுனக்குக்கு ஒரு பின்னடைவு என்று கருதப்படுகிறது.