ஒரு மாநகராட்சி மற்றும் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிக்குள் தொழில் தொடங்க வேண்டும் என்றால் அந்த மாநகர, நகர அமைப்பின் மூலம் அனுமதி வாங்க வேண்டும். இதுதான் தொழில் உரிமம், அல்லது வணிக உரிமம் என சொல்லப்படுகிறது. உள்ளாட்சி அமைப்புகளுக்கு முக்கியத்துவம் தரும் சட்டம் என்றாலும், அப்போதுதான் நகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை உறுதிசெய்ய முடியும். தவிர தொழில்வரி போன்றவையும் வசூலிக்க இது வகை செய்கிறது. அரசின் பல்வேறு துறைகளின் கீழ் அனுமதி வாங்கப்பட்ட தொழில் என்றாலும் மாநகர, நகர எல்லைக்குட்பட்ட பகுதிகள் எனில் இந்த அனுமதியும் வாங்க வேண்டும்.
இது குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பில்; தமிழ்நாடு ஒற்றைச் சாளர இணையதளம் (www.tnswp.com) என்பது, முதலீட்டாளர்கள் தமது தொழில் வணிக நடவடிக்கைகளுக்காக சட்டப்படியாக பெறவேண்டிய அனைத்து ஒப்புதல்கள், உரிமங்கள், அனுமதிகள் மற்றும் தடையில்லாச் சான்றிதழ்கள் ஆகியவற்றை குறிப்பிட்ட கால வரையறைக்குள் வெளிப்படையான மற்றும் சுலபமான முறையில் மின்னணு மூலம் பெற்றுக்கொள்ள உதவிடும் ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட இணையதளம் ஆகும். இத்தளம் மூலம் 40க்கும் மேற்பட்ட அரசுத் துறைகள் மற்றும் அரசு சார் நிறுவனங்கள் வழங்கும் 200க்கும் மேற்பட்ட சேவைகளை வழங்குகிறது.
உதாரணமாக பெட்ரோல் பங்க் தொடங்க தேவைப்படும் வருவாய்த் துறையின் முன் அனுமதி சான்று, தொழில் நிறுவனங்களுக்கு தீயணைப்புத்துறையில் பெறவேண்டிய முன் அனுமதி சான்று, தீ சான்று மற்றும் தீ சான்று புதுப்பித்தல், தொழில் நிறுவனம் அமைக்கும் முன்பு தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத் துறையில் பெற வேண்டிய கட்டிட திட்ட ஒப்புதல், தொழில் நிறுவனங்களை அமைப்பதற்கும்/ இயக்குவதற்கும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம் பெற வேண்டிய இசைவு சான்றுகள், தொழில் நிறுவனங்களுக்கு புதிய மின் இணைப்பு பெற எரிசக்தி துறையின் மூலம் வழங்கப்படும் அனுமதிகள் போன்ற பல்வேறு சேவைகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பம் இணையவழியாகப் பெறப்பட்டவுடன் உரிய அலுவலரால் பரிசீலிக்கப்பட்டு கூடுதல் ஆவணங்கள் மற்றும் விளக்கம் தேவைப்படின் அதிகபட்சம் 7 நாட்களுக்குள் தெரிவிக்கப்படும். இத்தளத்தின் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும் முறையினைக் கண்காணிக்கக் குழு மாதந்தோறும் கூடுகிறது. மாவட்டத் தொழில் மையப் பொதுமேலாளரால் கூட்டப்படும் இக்கூட்டத்துக்குத் தொடர்புடைய அனைத்து அலுவலர்களும் அழைக்கப்பட்டு நிலுவையிலுள்ள விண்ணப்பங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படுவதுடன் உரிய அறிவுறுத்தல்களும் வழங்கப்படுகின்றன.
தொழில் முதலீட்டாளர்களுக்குப் பெரும் பயனளிக்கும் இத்தளத்தினைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமெனவும், மேலும் தகவலுக்கு உங்களின் மாவட்ட தொழில் மையத்தை அணுகவும். கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், 95/2A2, ராஜா நகர், கள்ளக்குறிச்சி அலுவலகத்தை நேரிலோ அல்லது தொலைபேசி எண். 04151-294057 வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.