திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அருகே உள்ள பெரிய மலை கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன். கண்ணன் கால்நடைகளை பராமரித்து அதன் மூலம் வரும் வருமானத்தை கொண்டு குடும்பம் நடத்தி வருகிறார். இவரது மகன் முனீஸ் (18) கல்லூரி பயின்று வருகிறார். நேற்று விடுமுறை என்பதால் முனீஸ் மாடுகளை மேய்க்க சென்றிருக்கிறார். வழக்கம் போல மாடுகளை சாத்தூர் அணையின் நீர் தேக்கத்தை ஒட்டியுள்ள புல்வெளியில் மேய்ச்சலுக்கு சென்றிருக்கிறார்.
அப்போது முகம் கை, கால்களை கழுவ அணையின் நீர்பிடிப்பு பகுதிக்கு சென்றிருக்கிறார். அங்கு நீரில் மறைந்திருந்த முதலை, முனீஸை கடித்து நீருக்குள் இழுத்து சென்றிருக்கிறது. இதனால் உயிருக்கு போராடிய முனீஸ், நீரில் மூழ்கி மூச்சு திணறி உயிரிழந்திருக்கிறார். மேய்ச்சலுக்கு சென்ற மகன் நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு வராததால் சந்தேகம் அடைந்த தந்தை மகனை தேடி சென்றுள்ளார்.
அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மகனின் சடலம் மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து வந்தனர். உடனே காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் முகம் கழுவ நீர் நிலையில் இறங்கியபோது, முதலை இழுத்து சென்றிருப்பதும், அதனால்தான் மூச்சு திணறி முனீஸ் உயிரிழந்திருக்கிறார் என்பதும் தெரியவந்தது. உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் திருவண்ணாமலையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
Read more: உஷார்!. தவறுதலாக கூட இப்படி முட்டைகளை சமைக்காதீர்கள்!. புற்றுநோய் வரும் அபாயம்!. ஆய்வில் அதிர்ச்சி!