உத்தர பிரதேசத்தில் தலசீமியா நோயால் பாதிக்கப்பட்டு இரத்தம் ஏற்றப்பட்ட 14 குழந்தைகளுக்கு எச்.ஐ.வி. தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசத்தின் கான்பூரில் அரசு நடத்தும் லாலா லஜ்பத் ராய் (எல்.எல்.ஆர்) மருத்துவமனையில் தற்போது 180க்கும் மேற்பட்ட சிறுவர்கள் தலசீமியா நோயாளிகளுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த குழந்தைகளுக்கு மருத்துவமனையில் ரத்தம் ஏற்றுதல் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. தற்போது, ரத்தம் ஏற்றுதலுக்கு உட்பட்ட 14 குழந்தைகளுக்கு எச்.ஐ.வி நோய்த்தொற்றுகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தானம் பெறப்பட்ட ரத்தத்தில் வைரஸ்களுக்கான சோதனைகளில் தவறு இருக்கலாம். இரத்த மாற்றத்தின் போது, மருத்துவர்கள் வைரசுக்கு எதிராக தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது குறித்து மருத்துவர் தெரிவிக்கையில்., ” இது கவலைக்குரியது. குழந்தைகள் ஏற்கனவே ஒரு தீவிரமான பிரச்னையுடன் போராடுகிறார்கள். இப்போது அதிக அபாயத்தில் சிக்கி உள்ளனர். ஒருவர் ரத்த தானம் செய்யும்போது, ரத்தம் பயன்படுத்துவதற்கு பாதுகாப்பானதா என்பதை உறுதிப்படுத்த பரிசோதிக்கப்படுகிறது” என தெரிவித்தார்.