2023ஆம் ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு குறித்த அறிவிக்கையை டிஎன்பிஎஸ்சி விரைவில் வெளியிடயிருப்பதாக செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
2023ஆம் ஆண்டிற்கான போட்டித் தேர்வுகள் குறித்தான ஆண்டுத் திட்டத்தினை டிஎன்பிஎஸ்சி முன்னதாக வெளியிட்டது. இதில், பல லட்சக்கணக்கான தேர்வர்கள் பங்கேற்கும் குரூப்-4 தேர்வு குறித்த அறிவிப்பு 2023 நவம்பர் மாதம் வெளியிடப்படும் என்றும் அதற்கான தேர்வு 2024இல் நடைபெறுமென்றும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்படும் நிலையில், அதற்கு முன்னதாகவே குரூப் 4 தேர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிக்கை வெளியாகும் என்றும் எதிரிபார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 10,000 குரூப் 4 நிலை பணியாளர்கள் அரசுப் பணிகளில் இருந்து ஓய்வு பெறுகின்றனர். காலியாகும் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றாலும் கூட, ஆண்டுக்கு 10,000 குரூப் 4 பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஆனால், 2012 அறிவிக்கையின்படி 10,718, 2017 அறிவிக்கையின்படி 9,351, 2019 அறிவிக்கையின்படி 9,398, 2022 அறிவிக்கையின்படி 10,117 என கடந்த 12 ஆண்டுகளில் 40 ஆயிரத்திற்கும் குறைவான குரூப் 4 பணியாளர்கள் மட்டும் தான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
மேலும், தமிழ்நாட்டில் இன்றைய சூழலில் நான்கரை லட்சம் அரசு பணியிடங்கள் காலியாக இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. எனவே, கடந்தாண்டை விட கூடுதலாக 5,000 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பதவிகள், ஒரே நிலை எழுத்துத் தேர்வின் அடிப்படையில் நியமனம் செய்யப்படுவதால், தேர்வர்களுக்குள் கடும் போட்டி நிலவும் என்றும், இதனால் கட்- ஆப் மதிப்பெண் அதிகரிக்கக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.