மத்திய அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய சலுகைகளை ஒழுங்குபடுத்தும் வகையில், மத்திய சிவில் சர்வீஸ் விதிகளில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. செப்டம்பர் 2-ஆம் தேதி ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர்கள் நலத்துறை அரசிதழில் வெளியிட்டுள்ள விதிகளின்படி, 20 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட சேவை செய்த பிறகு விருப்ப ஓய்வு பெறும் மத்திய அரசு ஊழியர்கள், விகிதாச்சார அடிப்படையில் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் பெற தகுதி பெறுகின்றனர்.
இதன் மூலம், முன்பு 25 ஆண்டுகள் பணிக்காலம் நிறைவு செய்தவர்களுக்கு மட்டுமே கிடைத்திருந்த சலுகை, இப்போது 20 ஆண்டுகளுக்கு பிறகே கிடைக்கப்போகிறது. ஓய்வு பெறும் நாளில் பணியாற்றிய ஆண்டுகளை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்பட்ட தொகை, ஊழியருக்கு உறுதியான ஓய்வூதியமாக வழங்கப்படும். மேலும், ஓய்வுபெறும் போது:
- இறுதித் தொகையில் 60% வரை திரும்பப் பெறுதல்,
- அகவிலைப்படி,
- ஓய்வு பணிக்கொடை,
- விடுப்பை பணமாக்குதல்,
மத்திய அரசு ஊழியர்கள் குழு காப்பீட்டு திட்டம் உள்ளிட்ட பல சலுகைகளும் வழங்கப்படும். விருப்ப ஓய்வு பெற்ற பிறகு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் பெறுவதற்கு முன்பே சந்தாதாரர் உயிரிழந்தால், சட்டப்பூர்வமாக திருமணம் செய்த கணவர் அல்லது மனைவிக்கு குடும்ப ஓய்வூதியம் என்றும் அமைச்சகம் அறிவித்துள்ளது.