பிரதமர் நரேந்திர மோடியின் தாயாரின் AI வீடியோவை அனைத்து சமூக ஊடக தளங்களிலிருந்தும் நீக்குமாறு காங்கிரஸ் கட்சிக்கு பாட்னா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை தற்காலிக தலைமை நீதிபதி பி.பி. பஜந்தரி பிறப்பித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி தனது கனவில் மறைந்த தாயார் ஹீராபென் கனவில் பார்ப்பதை போலவும், அவர் வாக்கு திருட்டு குறித்து தனது மகனுக்கு அறிவுரை கூறியது போலவும் உருவாக்கப்பட்ட AI வீடியோவை காங்கிரஸ் கட்சியின் பீகார் பிரிவு சமூக ஊடகங்களில் வெளியிட்டதை அடுத்து காங்கிரஸ் கட்சி கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. இந்த வீடியோ காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்ததால் ஒரு அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியது.
பின்னர், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது மறைந்த தாயாரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் AI-உருவாக்கிய வீடியோவை பரப்பியதற்காக காங்கிரஸ் தலைவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டது.
இந்தப் புகாரை பாஜக டெல்லி தேர்தல் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் சங்கேத் குப்தா தாக்கல் செய்துள்ளார். இருப்பினும், பிரதமருக்கோ அல்லது அவரது தாயாருக்கோ எந்த அவமரியாதையும் செய்யப்படவில்லை என்று காங்கிரஸ் கூறி வருகிறது.
கடந்த வாரம், பீகார் காங்கிரஸ் கட்சியும் வீடியோ குறித்து விசாரணையைத் தொடங்கியதாகக் குறிப்பிட்டிருந்தது. மேலும் நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு உள்ளடக்கத்தைப் பகிர்ந்ததற்கு யார் பொறுப்பு என்பதை முதலில் தீர்மானிப்போம் என்று காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.
முன்னதாக பீகாரின் தர்பங்காவில் காங்கிரஸ் தலைமையிலான ‘வாக்காளர் அதிகார யாத்திரை’யின் மேடையில் தெரியாத ஒருவர் பிரதமர் மோடி மற்றும் அவரது தாயாரை அவதூறாகப் பேசிய வீடியோ இணையத்தில் வெளியான நிலையில் பாஜக அதற்கு கடும் கண்டனம் தெரிவித்தது..



