கரூரில் 39 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், சி.டி. நிர்மல் குமார் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பாய்ந்தது.
தவெக தலைவர் விஜய் நேற்று இரவு 7 மணியளவில் கரூரில் பரப்புரை மேற்கொண்டார். அவர் பரப்புரை மேற்கொண்ட வேலுச்சாமிபுரத்தில் ஆயிரகணக்கானோர் திரண்டிருந்தனர். இதனால் அங்கு கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் குழந்தைகள் பெண்கள் உட்பட ஏராளமானோர் மயக்கமடைந்தனர். உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி பள்ளி குழந்தைகள் உட்பட 39 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் தீவிர சிகிச்சையில் உள்ளனர். மயக்கமடைந்து சிகிச்சை பெறுபவர்களில் சிலருக்கு செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் இருந்து வருகின்றனர்.
முதலமைச்சர் ஸ்டாலின் நேரடியாக சென்று இறந்தவர்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், சி.டி. நிர்மல் குமார் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கரூர் நகர காவல் நிலையத்தில் 105, 110, 125(b), 223 r/w 3 of TNPPDL சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முதல் குற்றவாளியாக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், இரண்டாம் குற்றவாளியாக புஸ்ஸி ஆனந்த், மூன்றாம் குற்றவாளியாக சி.டி நிர்மல் குமார் உள்ளிட்ட மற்ற நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. BNS பிரிவு 105 – கொலைக்கு சமமல்லாத குற்றமற்ற கொலைக்கான தண்டனை. BNS பிரிவு 110 – குற்றமற்ற கொலை செய்ய முயற்சி. BNS பிரிவு 125 – மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அவசர/அலட்சிய செயல்களுக்கு தண்டனை சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் BNS பிரிவு 223 – பொது அதிகாரியின் உத்தரவுக்குக் கீழ்ப்படியாமை குற்றமாக்கப்படுகிறது. TNPPDL சட்டம் பிரிவு 3 – பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது .