தமிழ்நாட்டில் வேளாண் பட்டதாரிகளை வெற்றிகரமான தொழில்முனைவோராக மாற்றும் நோக்குடனும், விவசாயிகளுக்கு தேவையான அனைத்துச் சேவைகளையும் ஒரே திட்டத்தின் கீழ் வழங்குவதற்காகவும், தமிழ்நாடு அரசு “முதலமைச்சரின் உழவர் நல சேவை மையம்” என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் ஆண்டுதோறும் வெளியேறும் சுமார் 4,000 வேளாண் பட்டதாரிகள் மற்றும் 600 பட்டயதாரர்களின் தொழில்நுட்பத் திறன்களைப் பயன்படுத்தி, விவசாய உற்பத்தியைப் பெருக்குவதே அரசின் முக்கிய இலக்காகும். இதன் கீழ், மாநிலம் முழுவதும் மொத்தம் 1,000 உழவர் நல சேவை மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
மானியம் மற்றும் உதவிகள் : இந்த மையங்களைத் தொடங்க விரும்பும் வேளாண் பட்டதாரிகளுக்கு அரசு மானியம் வழங்குகிறது. ரூ.10 லட்சம் முதலீட்டில் மையம் அமைத்தால் ரூ.3 லட்சமும், ரூ.20 லட்சம் முதலீட்டில் மையம் அமைத்தால் அதிகபட்சமாக ரூ.6 லட்சமும் மானியமாக வழங்கப்படும். மேலும், இந்த மையங்களுக்கு தேவையான விதை, உரம் மற்றும் பூச்சிக்கொல்லி விற்பனை உரிமங்களை வேளாண்மைத் துறையே பெற்றுத் தரும்.
விவசாயிகளுக்கான சேவை மையம் : இந்த சேவை மையங்கள் விவசாயிகளுக்கு முழுமையான தீர்வுகளை வழங்க இருக்கின்றன. விவசாயத்திற்கு தேவையான இடுபொருட்கள் (விதை, உரம், பூச்சிக்கொல்லி) ஒரே இடத்தில் கிடைக்கும். அத்துடன், பூச்சி நோய் தாக்குதல்களில் இருந்து பயிர்களைப் பாதுகாப்பது, நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது, விளைபொருட்களை மதிப்பு கூட்டுவது, வேளாண் காப்பீடு மற்றும் பயிர்க் கடன் பெறுவது குறித்த ஆலோசனைகளும் வழங்கப்படும்.
யார் விண்ணப்பிக்கலாம்..?
தோட்டக்கலை, வேளாண்மை, வேளாண் வணிகம் அல்லது வேளாண் பொறியியலில் பட்டப்படிப்பு அல்லது பட்டயப் படிப்பு முடித்த, 20 முதல் 45 வயதுக்குட்பட்ட விண்ணப்பதாரர்கள் இத்திட்டத்தில் இணையலாம். விண்ணப்பதாரர்கள் கணினித் திறன் பெற்றிருக்க வேண்டும் மற்றும் அரசு/அரசு சார்ந்த நிறுவனங்களில் பணியில் இருக்கக் கூடாது.
முதலில் விரிவான திட்ட அறிக்கையைத் தயாரித்து, தேசியமயமாக்கப்பட்ட அல்லது கூட்டுறவு வங்கியில் கடன் பெற ஒப்புதல் பெற்ற பின், https://www.tnagrisnet.tn.gov.in/KaviaDP/register என்ற இணையதளத்தில் மானியத்திற்கு விண்ணப்பிக்கலாம். தகுதிகள் சரியாக இருக்கும் பட்சத்தில், மானிய தொகை வங்கிக் கணக்கிற்கு வரவு வைக்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு, தங்கள் பகுதியிலுள்ள வேளாண்மைத் துறை அலுவலகத்தை அணுகலாம்.
Read More : டிகிரி முடித்திருந்தால் போதும்..!! மாதம் ரூ.40,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை..!! விண்ணப்பிப்பது எப்படி..?



