கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நேற்று முன்தினம் பரப்புரை மேற்கொண்டார். அப்போது, ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் உயிரிழந்தனர். தற்போது வரை 41 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மாநில அரசு ரூ. 10 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளது. மத்திய அரசு தலா ரூ. 2 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளது. தவெக சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 20 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கரூர் சம்பவத்தில் முறையாக விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று கூறி தவெகவின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார், மதியழகன் உள்ளிட்ட 4 பேர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத வகையில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கரூரில் தவெக கூட்டத்தில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும் என தவெக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த சம்பவத்தில் உள்ளூர் அரசியல்வாதியான செந்தில் பாலாஜிக்கு தொடர்பு இருப்பதாக தமிழக வெற்றிக் கழகம் சார்பில் குற்றசாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. எனவே செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கட்சியின் ஆதவ் அர்ஜுனா மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செந்தில் பாலாஜி குறித்து விஜய் பேசிக்கொண்டிருந்த போது, செருப்பு மற்றும் கற்கள் அவர் மீது வீசப்பட்டன என்றும் அப்பாவி மக்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியதாகவும் அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.
Read more: கரூர் துயரம்..!! பிள்ளைகளின் முழு கல்விச் செலவையும் SRM ஏற்கும்..!! பாரிவேந்தர் அறிவிப்பு..!!



