கரூர் நெரிசல் பற்றி சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பிய 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது..
தவெக தலைவர் நடிகர் விஜய் கடந்த சனிக்கிழமை நாமக்கல், கரூரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.. கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.. இந்த சம்பவம் நடந்த உடனே அமைச்சர்கள் அங்கு விரைந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் இரவோடு இரவாக கரூர் சென்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்தார். மேலும் இந்த கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார்.. மேலும் இந்த சம்பவம் குறித்து ஒருநபர் விசாரணை ஆணையம் அமைத்தும் உத்தரவிட்டார். அதன்படி நீதியரசர் அருணா ஜெகதீசன் கரூரில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்..
இதை தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர்கள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கரூருக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர்.. எனினும் இந்த சம்பவத்திற்கு காரணமான தவெக கட்சியினரோ அக்கட்சி தலைவர் விஜய்யோ இதுவரை கரூருக்கு செல்லாதது அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி பொதுமக்களிடையேயும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.. விஜய் கரூரில் இருந்து சென்னை சென்றிருக்க கூடாது என்றும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான காவல்துறையின் முதல் தகவல் அறிக்கை வெளியாகி உள்ளது.. இந்த எஃப்.ஐ.ஆரில் பல அதிர்ச்சி தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், தனது அரசியல் பலத்தை காட்ட விஜய் வேண்டுமென்றே காலதாமதம் செய்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. நாமக்கல் பரப்புரைக்கு வரும் போதே விஜய் வேண்டுமென்றே தாமதம் செய்தார். கரூரிலும் விஜய் தரூர் பரப்புரை கூட்டத்திற்கு வரும் போதும் கூட விஜய் வேண்டுமென்றே காலதாமதம் செய்தார் என்று எஃப்.ஐ.ஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அசாதாரண சூழல் ஏற்படும் என்று புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமாரை எச்சரித்தும் அறிவுரை வழங்கியும் கூட அவர்கள் கேட்கவில்லை.. விஜய் வருவது தாமதம் ஆனதால் எதிர்பார்ப்பு அதிகரித்து மக்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கி விட்டது. தாமதமாக வந்த விஜய்யை பார்ப்பதற்காகவே காலையில் இருந்த காத்திருந்த மக்கள் சோர்வடைந்தனர்.. விஜய் கரூருக்கு வருவதை திட்டமிட்டு 4 மணி நேரம் தாமதப்படுத்தியதால் அதிக அளவில் கூட்டம் கூடியது. விஜய் வேண்டுமென்றே ராங் ரூட்டில் பயணம் செய்து வந்தார்.. கரூர் பரப்புரை கூட்டத்தில் மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே 11 பேர் உயிரிழந்துவிட்டனர்.. பலர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.. உயிர் சேதம் ஏற்படும் என பலமுறை எச்சரித்தும் கூட தவெக நிர்வாகிகள் கேட்கவில்லை.. ” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கரூர் நெரிசல் பற்றி சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பிய 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.. பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் வதந்திகளை பரப்பிய 25 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.. வழக்குப்பதிவு செய்யப்பட்ட 25 பேரையும் கைது செய்ய உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் யாரும் சமூக வலைதளங்களில் பதிவிட வேண்டாம் எனவும் பொது அமைதிக்கும் பங்கம் விளைவிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை எச்சரித்துள்ளது..
Read More : Flash : தலைமறைவான புஸ்ஸி ஆனந்த் சேலத்தில்? சினிமா பாணியில் போலீசாரை குழப்பியதாக தகவல்..



