உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் நடந்த ஒரு கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கான்பூரை சேர்ந்த சூரஜ் குமார் என்ற எலக்ட்ரீசியனும், அதே பகுதியைச் சேர்ந்த அகன்ஷா என்ற பெண்ணும் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமாகி பழகி வந்துள்ளனர்.
முதலில் நட்பாக பேசி வந்த இவர்களின் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதையடுத்து, இருவரும் தனியாக ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து ‘லிவிங் டுகெதர்’ முறையில் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில், அகன்ஷாவின் தாயார் தனது மகள் காணாமல் போனதாக போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் விசாரணையை தொடங்கியபோது, சூரஜ் குமாரிடம் விசாரித்தனர். ஆரம்பத்தில், “அகன்ஷா என்னுடன் தான் இருந்தார். பிறகு எங்கு சென்றார் என்று தெரியவில்லை” என்று அவர் கூறியுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், தீவிரமாக விசாரித்ததில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன.
சூரஜ் குமார் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததும், இதை அகன்ஷா எதிர்த்து கேள்வி எழுப்பியதால் தொடர்ந்து அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதும் தெரியவந்தது. மேலும், அகன்ஷா அந்த உறவை கைவிட்டு தன்னைத் திருமணம் செய்ய சொல்லி சூரஜை வற்புறுத்தியதால் சண்டை முற்றியுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த சூரஜ் குமார், காதலி அகன்ஷாவின் தலையை பிடித்து சுவரில் அடித்து, கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். கொலைக்குப் பிறகு, அகன்ஷாவின் உடலை ஒரு பெரிய சூட்கேசில் அடைத்து, அதை யமுனா நதியில் வீசியதாக சூரஜ் குமார் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்தக் கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், போலீசார் அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.



