ராஜஸ்தானில் இருமல் சிரப் குடித்த 2 குழந்தைகள் பலியான நிலையில், மருந்து பாதுகாப்பானது என்பதை நிரூபிக்க அதை உட்கொண்ட மருத்துவரும் மயக்கமடைந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ராஜஸ்தான் அரசாங்கத்திற்காக கேசன் பார்மா என்ற நிறுவனத்தால் டெக்ஸ்ட்ரோமெத்தோர்பான் ஹைட்ரோபுரோமைடு என்ற சேர்மம் கொண்ட இருமல் சிரப் தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்படுகிறது. இந்தநிலையில் கடந்த வாரம் ராஜஸ்தானின் சிகார் மாவட்டத்தைச் சேர்ந்த 5 வயது நிதீஷுக்கு இருமல் மற்றும் சளி ஏற்பட்டதால், அவரது பெற்றோர் ஞாயிற்றுக்கிழமை சிரானாவில் உள்ள சமூக சுகாதார மையத்திற்கு (CHC) அழைத்துச் சென்றனர். மருத்துவர் இருமல் மருந்தை பரிந்துரைத்தார், அது மையத்திலிருந்து வழங்கப்பட்டது, அன்றிரவு 11.30 மணியளவில் நிதிஷின் தாயார் அதை அவருக்குக் கொடுத்தார்.
நிதீஷ் அதிகாலை 3 மணிக்கு ஒரு முறை விழித்தெழுந்தபோது விக்கல் வந்தது, அதன் பிறகு அவரது தாயார் அவருக்கு சிறிது தண்ணீர் கொடுத்துள்ளார். இதை தொடர்ந்து அவர் மீண்டும் தூங்கிவிட்டார். அதன் பிறகு அவர் ஒருபோதும் எழுந்திருக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் சிறுவனை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர், ஆனால் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
சிறுவனின் மாமா பிரியகாந்த் சர்மா கூறுகையில், நிதிஷ் அன்று நலமாக இருந்தார், மாலையில் நவராத்திரி நிகழ்ச்சிக்கும் சென்றிருந்தார். இரவில் மீண்டும் இருமல் வரத் தொடங்கியபோது, சிரானா சிஎச்சியில் இருந்து நாங்கள் பெற்ற மருந்தை அவருக்குக் கொடுத்தார்கள். காலையில், அவர் எழுந்திருக்கவில்லை என்பதை உணர்ந்து, சிஎச்சிக்கு அழைத்துச் சென்றோம். அங்கு, அவரை சிகாரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி மருந்தாளர் எங்களிடம் கூறினார். அவருக்கு பரிந்துரைக்கப்பட்ட அளவு வழங்கப்பட்டது, மருந்து எடுத்துக்கொள்வதற்கு முன்பு அவர் நலமாக இருந்தார்,” என்று கூறியுள்ளார்.
இந்த வாரம் நிதிஷ் பற்றிய செய்தி வெளியானபோது, செப்டம்பர் 22 அன்று இருமல் சிரப்பை உட்கொண்டதால் இறந்த 2 வயது குழந்தையின் பெற்றோரும் அவரது மரணத்திற்கு என்ன காரணம் என்பதை உணர்ந்தனர்.
பரத்பூரின் புறநகரில் 2 வயது குழந்தை சாம்ராட் ஜாதவ், அவரது சகோதரி சாக்ஷி மற்றும் உறவினர் விராட் ஆகிய மூவருக்கும் இந்த மாத தொடக்கத்தில் இருமல் மற்றும் சளி வந்ததாக அவர்கள் தெரிவித்தனர். அவரது தாயார் ஜோதி செப்டம்பர் 22 அன்று உள்ளூர் பொது சுகாதார மையத்திற்குச் சென்றார், அங்கு கெய்சன் பார்மா தயாரித்த அதே இருமல் சிரப் அவருக்கு வழங்கப்பட்டது.
மதியம் 1.30 மணிக்கு ஜோதி சாம்ராட், சாக்ஷி மற்றும் விராட் ஆகியோருக்கு சிரப்பைக் கொடுத்தார், ஐந்து மணி நேரம் கழித்தும் மூன்று குழந்தைகளில் யாரும் எழுந்திருக்காததால் குடும்பத்தினர் மிகவும் கவலைப்பட்டனர். சாக்ஷியையும் விராட்டையும் அவர்கள் அசைத்து எழுப்பினர், இருவரும் உடனடியாக வாந்தி எடுத்தனர், ஆனால் சாம்ராட் மயக்கமடைந்தார். இரண்டு வயது குழந்தை பரத்பூரில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் ஜெய்ப்பூரில் உள்ள ஜே.கே. லோன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது, அங்கு செப்டம்பர் 22 அன்று இறந்தார்.
“எனது மூன்று பேரக்குழந்தைகள் சிரப்பை எடுத்துக் கொண்டனர், அது ஆபத்தானது என்று எங்களுக்குத் தெரியாது. அவர்களில் இருவர் இறுதியாக சில மணிநேரங்களுக்குப் பிறகு எழுந்தார்கள், ஆனால் நான் 2 வயது சாம்ராட்டை இழந்தேன்… சிகார் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுவன் பற்றியும், அதனால் மற்றவர்கள் நோய்வாய்ப்பட்டதையும் பற்றி நாங்கள் கேள்விப்படும் வரை சிரப் தான் காரணம் என்று எங்களுக்குத் தெரியாது,” என்று சாம்ராட்டின் பாட்டி நெஹ்னி ஜாதவ் கூறினார்.
மேலும், பயானாவில், செப்டம்பர் 24 அன்று இருமல் சிரப் கொடுக்கப்பட்ட பிறகு 3 வயது ககன் குமார் நோய்வாய்ப்பட்டார், மேலும் அவரது தாயார், சிரப்பை பரிந்துரைத்த சமூக சுகாதார மையப் பொறுப்பாளரான டாக்டர் தாராசந்த் யோகியிடம் இது பற்றி கூறியுள்ளார். இந்த மருந்தை பாதுகாப்பானது என்பதை நிரூபிக்க டாக்டர் யோகி, ஒரு டோஸ் எடுத்துக்கொண்டு, ஆம்புலன்ஸ் டிரைவருக்கும் கொடுத்துள்ளார். பின்னர் மருத்துவர் தனது காரில் பரத்பூருக்குப் புறப்பட்டார்.
சிறிது நேரத்தில் மயக்கம் வருவதை உணர்ந்த மருத்துவர், சாலையோரத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு மயக்கமடைந்தார். நீண்ட நேரமாகியும் அவரிடமிருந்து எந்த தகவலும் கிடைக்காததால், அவரது குடும்பத்தினர் அவரது மொபைல் இருப்பிடத்தைக் கண்டுபிடித்தனர், எட்டு மணி நேரத்திற்குப் பிறகு அவர் காரில் மீட்கப்பட்டார். சிரப் கொடுக்கப்பட்ட மூன்று மணி நேரத்திற்குப் பிறகு ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கும் இதே போன்ற அறிகுறிகள் இருப்பதாகவும், சிகிச்சைக்குப் பிறகு அவர் குணமடைந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு வாரத்தில், தெற்கு ராஜஸ்தானின் பன்ஸ்வாரா மாவட்டத்தில் ஒன்று முதல் ஐந்து வயது வரையிலான எட்டு குழந்தைகள் இந்த மருந்தை உட்கொண்டதால் நோய்வாய்ப்பட்டுள்ளனர். இரண்டு குழந்தைகள் இறந்ததாகவும், மற்றவர்கள் நோய்வாய்ப்பட்டதாகவும் செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து, ராஜஸ்தான் அரசு 22 பேட்ச் சிரப்பை தடை செய்து, அவற்றின் விநியோகத்தை நிறுத்தி வைத்தது.
இந்த ஆண்டு ஜூலை முதல் ராஜஸ்தானில் 1.33 லட்சம் பாட்டில்கள் சிரப் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக மருத்துவத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஜெய்ப்பூரில் உள்ள எஸ்எம்எஸ் மருத்துவமனையில் 8,200 க்கும் மேற்பட்ட சிரப் பாட்டில்கள் கையிருப்பில் உள்ளன, ஆனால் அவை யாருக்கும் வழங்கப்படாமல் பார்த்துக் கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு கூறப்பட்டுள்ளது.
இதேபோல் மத்திய பிரதேசத்திலும், கடந்த 22 நாட்களில் 6 குழந்தைகள் இருமல் சிரப் குடித்ததில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. செப்டம்பர் 4 முதல் 26 வரை சிந்த்வாராவில் ஆறு குழந்தைகள் சிறுநீரக செயலிழப்பால் இறந்ததாக ஒரு அதிகாரி ANI செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட குடும்பங்கள் குழந்தைகளுக்கு ஆரம்பத்தில் சளி மற்றும் காய்ச்சல் இருந்ததாகவும், ஆனால் பின்னர் அவர்களின் சிறுநீரகங்கள் மோசமடைந்ததாகவும் கூறுகின்றன.
இந்த விவகாரம் குறித்து விசாரிக்க மத்திய மற்றும் மாநில அரசுகளின் குழுக்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாக சிந்த்வாராவின் CMHO டாக்டர் நரேஷ் குன்னாடே தெரிவித்தார். குழந்தைகள் சிகிச்சையில் இருந்தபோது நாக்பூரில் மூன்று இறப்புகளும், மீதமுள்ளவை சிந்த்வாராவில் ஏற்பட்டதாகவும் அவர் மேலும் கூறினார். தண்ணீர், மருந்துகள் மற்றும் பிற பொருட்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன,
மத்தியப் பிரதேச துணை முதல்வரும் சுகாதார அமைச்சருமான ராஜேந்திர சுக்லா, இருமல் மருந்து குடித்ததால் குழந்தைகள் இறந்ததாக கூறப்படுவது ஆதாரமற்றது என்று கூறினார். மாதிரிகள் ஐசிஎம்ஆர் மற்றும் நாக்பூரில் உள்ள ஒரு ஆய்வகத்திற்கு சோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார். அறிக்கைகள் வந்த பின்னரே உண்மையான காரணம் தெளிவாகத் தெரியும் என்று கூறியுள்ளார்.
Readmore: படுத்தி எடுக்கும் ராகுவை குளிர்விக்க இந்த கோவிலுக்கு போங்க.. பிரச்சனை எல்லாம் தீரும்..!!



