இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (ட்ராய்), “தனியார் வானொலி ஒலிபரப்பு நிறுவனங்களுக்கு டிஜிட்டல் வானொலி ஒலிபரப்புக் கொள்கையை உருவாக்குதல்” குறித்த பரிந்துரைகளை வெளியிட்டுள்ளது.
மேலும், டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை ஆகிய நான்கு ‘ஏ+’ வகை நகரங்களிலும், ஐதராபாத், பெங்களூரு, அகமதாபாத், சூரத், புனே, ஜெய்ப்பூர், லக்னோ, கான்பூர், நாக்பூர் ஆகிய ஒன்பது ‘ஏ’ வகை நகரங்களிலும் டிஜிட்டல் வானொலி ஒலிபரப்பு சேவையைத் தொடங்குவதற்கான விதிமுறைகள், நிபந்தனைகள் மற்றும் ஒப்பந்தப் புள்ளிக்கான குறைந்தபட்ச கட்டணத்தையும் இது கொண்டுள்ளது.
தனியார் வானொலி ஒலிபரப்பாளர்களுக்கு டிஜிட்டல் வானொலி ஒலிபரப்புக் கொள்கையை உருவாக்குவது குறித்து 1997 ஆம் ஆண்டு ட்ராய் சட்டத்தின் பிரிவு 11 (1)(ஏ)(i) -ன் கீழ் ட்ராய்-இடம் மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் 2024, ஏப்ரல் 23 தேதியிட்ட குறிப்பின் மூலம் பரிந்துரைகளைக் கோரியிருந்தது. இது தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் குறித்து பங்குதாரர்களின் கருத்துகளைக் கோரி 2024, செப்டம்பர் 30 அன்று ஒரு ஆலோசனைக் குறிப்பு வெளியிடப்பட்டது.
ட்ராய் வலைதளத்தில் 43 உடன்பாட்டுக் கருத்துகளும் 13 எதிர்க் கருத்துகளும் பெறப்பட்டன. அதைத் தொடர்ந்து 2025, ஜனவரி 8, அன்று ஒரு திறந்தவெளி விவாதம் நடைபெற்றது.பெறப்பட்ட அனைத்து கருத்துகளையும் பரிசீலித்து, சிக்கல்களை மேலும் பகுப்பாய்வு செய்த பின், ஆணையம் அதன் பரிந்துரைகளை இறுதி செய்துள்ளது.