இளம் தலைமுறையினர் முதல் நடுத்தர வயதினர் வரை இன்று பலரும் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சனை நீண்டகால முடி உதிர்வு ஆகும். இந்தப் பிரச்சனை அதிகரித்து வரும் நிலையில், பிரபல ஆரோக்கிய மற்றும் நலவாழ்வு நிபுணர் டிம்பிள் ஜங்கடா, முடி உதிர்வுக்கான முக்கிய காரணங்களையும், அதைத் தடுக்க வீட்டிலேயே செய்யக்கூடிய எளிய சிகிச்சை முறைகளையும் விளக்கியுள்ளார்.
இரும்புச்சத்துக் குறைவு : முடி வேர்கள் ஓய்வு நிலைக்குச் சென்றுவிடுவதால் தான் அதிக அளவில் முடி உதிர்வு ஏற்படுவதாக நிபுணர் கூறுகிறார். இதற்கு முக்கியமான காரணமாக, உடலில் நிலவும் இரும்புச்சத்து குறைபாடு சுட்டிக்காட்டப்படுகிறது. இரும்புச்சத்தை அதிகரிக்க, தினசரி உணவில் கேரட், பீட்ரூட், பசலைக்கீரை ஆகியவற்றைச் சூப்பாகச் சேர்த்துக்கொள்ளலாம். மேலும், செலரி மற்றும் கொத்தமல்லி சட்னி போன்ற எளிய வழிகள் மூலமாகவும் இரும்புச்சத்தை உடலுக்குள் சேர்க்கலாம்.
முடி உதிர்வைத் தடுக்கும் இயற்கை மாஸ்க் : முடி உதிர்வை தடுப்பதற்கும், உச்சந்தலையில் ஏற்படும் அலர்ஜியை குறைப்பதற்கும் ஒரு சக்திவாய்ந்த இயற்கை மாஸ்க்கை பயன்படுத்தலாம். ஒரு கைப்பிடி வெந்தயத்தை இரவு முழுவதும் ஊறவைத்து, காலையில் அதனுடன் சிறிதளவு ஆளி விதை (Flax Seeds) மற்றும் அரிசி சேர்த்துக்கொள்ள வேண்டும். இந்த கலவை ஜெல்லி போன்ற நிலைக்கு வரும் வரை கொதிக்க வைத்து வடிகட்டி, பின்னர் தலையில் 20 நிமிடம் பூசி கழுவினால், முடி உதிர்வு குறைந்து, அலர்ஜியும் கட்டுக்குள் வரும்.
புதிய முடி வளர்ச்சி : புதிய முடி வளர்ச்சியை தூண்ட, ரோஸ்மெரி மற்றும் ஆப்பிள் சைடர் வினிகர் ஸ்பிரே உதவிகரமாக இருக்கும். ஒரு கைப்பிடி ரோஸ்மெரி இலைகளை 15 நிமிடம் கொதிக்க வைத்து வடிகட்டி, அதில் ஒரு டீஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகர் சேர்த்துக்கொள்ள வேண்டும். இந்தத் திரவத்தைச் ஸ்பிரே பாட்டிலில் எடுத்து, தினமும் 3 முதல் 4 முறை தலையில் தெளித்து வருவதன் மூலம் புதிய முடி வளர்ச்சியை ஊக்குவிக்கலாம்.
முடி உதிர்வை மோசமாக்கும் பழக்கங்கள் : முடி உதிர்வை தீவிரப்படுத்தும் சில பழக்கங்களை உடனடியாக நிறுத்த வேண்டும். அடிக்கடி சீவுதல், அடிக்கடி ஹேர் ஆயில் மசாஜ் செய்தல், கடுமையான ஷாம்பு மற்றும் கண்டிஷனர்களை பயன்படுத்துதல், ப்ளோ ட்ரையர் அல்லது ஹேர் ட்ரையரை அடிக்கடி உபயோகித்தல் ஆகியவை தலையில் அழுத்தத்தையும் அலர்ஜியையும் அதிகரித்து முடி உதிர்வை மோசமாக்கும்.
மூலிகை எண்ணெய்கள் : முடி உதிர்வு முழுவதுமாக நின்ற பின்னரே எண்ணெய் சிகிச்சையை தொடங்க வேண்டும் எனக் கூறும் நிபுணர், முடி வளர்ச்சிக்குச் சிறந்த மூன்று மூலிகை எண்ணெய்களைப் பரிந்துரைக்கிறார். பிரிங்கிராஜ் எண்ணெய், நெல்லிக்காய் எண்ணெய் மற்றும் பிராமி எண்ணெய் ஆகியவற்றை சமமாக கலந்து வாரத்தில் இரண்டு முறை தலையில் தடவி வரலாம்.
Read More : HCL நிறுவனத்தில் கொட்டிக் கிடக்கும் வேலை..!! நாளை நேர்காணல்..!! மிஸ் பண்ணிடாதீங்க..!! விவரம் உள்ளே..!!