கரூர் வேலுசாமிபுரத்தில் நடந்த விஜய்யின் தவெக பரப்புரை கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பான வழக்கில் தவெகவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.. மேலும் “ கரூரில் நடந்தது மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு.. சட்டத்தின் முன்பு அனைவரும் சமம்.. அரசு அமைதியாக இருக்க முடியாது..
யார் மீது தவறு உள்ளதோ அவர் மீது நடவடிக்கை வேண்டும்.. தவெக என்ன மாதிரியான கட்சி..? மக்களை கைவிட்டு தலைவரும் பொறுப்பாளர்களும் பொறுப்பற்ற முறையில் வெளியேறி உள்ளனர்.. தங்கள் தொண்டர்களை விட்டு விட்டார்கள்.. தலைமைத்துவ பண்பே இல்லை.. சம்பவத்திற்கு பொறுப்பேற்காத தவெகவுக்கு கடும் கண்டனம்..” என்று நீதிபதி காட்டமாக பேசினார்..
மேலும் கரூர் கூட்ட நெரிசல் குறித்து விசாரிக்க வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில், நாமக்கல் போலீஸ் சூப்பிரண்டு அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்து உத்தரவிட்டார். வழக்கு தொடர்பான ஆவணங்களை உடனடியாக சிறப்பு புலனாய்வு குழு வசம் ஒப்படைக்க, கரூர் போலீசாருக்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
இந்த நிலையில், கரூரில் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம் தொடர்பான வழக்கில் ஐகோர்ட்டு அமைத்த சிறப்பு புலனாய்வு குழு விசாரணை தொடங்கியுள்ளது. வழக்கின் கோப்புகள் மற்றும் ஆதாரங்களை ஐ.ஜி.அஸ்ரா கார்க்கிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தில் இருந்து ஐஜி அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தியது.
கரூர் சைபர் கிரைம் உதவி ஆய்வாளர் சுதர்சன், கரூர் தனி படை காவலர் மோகன் ஆகியோரிடம் 27-ம் தேதி தவெக கூட்டத்தில் நடந்த சம்பவம் குறித்து சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கரூர் சம்பவம் குறித்து இன்று விசாரணையை தொடங்கியிருக்கிறோம். சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்துள்ளோம். விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. விசாரணை விவரங்களை மேற்கொண்டு நானே சொல்கிறேன் என்றார். வேலுச்சாமிபுரத்தில் சுமார் 45 நிமிடங்கள் சிறப்பு புலனாய்வு குழு ஆய்வு நடத்தியது குறிப்பிடத்தக்கது.