சேலம் மாவட்டம் ஏற்காட்டை அடுத்த மோட்டுக்காடு கிராமத்தை சேர்ந்தவர் சிவகுமார் (36). எலக்ட்ரீசியனாகப் பணியாற்றி வந்த இவருக்கு மாராயி என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். சிவகுமாரின் மனைவி, ஏற்காடு மருதயாங்காடு பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய சந்தோஷ் என்பவருடன் சுமார் இரண்டரை ஆண்டுகளாகக் கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார்.
இந்த விவகாரம் சிவகுமாருக்குத் தெரியவர, கணவன் – மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் காவல் நிலையம் வரை சென்று சமாதானப்படுத்தப்பட்ட பின்னரும், ஒரு மாதத்திற்கு முன்பு மனைவி மீண்டும் சந்தோஷுடன் பேசி வந்துள்ளார்.
ஒருமுறை, சிவகுமார் இல்லாதபோது வீட்டிற்கு வந்த சந்தோஷை, சிவகுமார் பிடித்து ஊர் பெரியவர்கள் மத்தியில் கட்டி வைத்து தாக்கியதாக கூறப்படுகிறது. ஆனால் அதன் பின்னரும், பிள்ளைகளின் எதிர்காலத்தைக் கருதி சிவகுமார் தன் மனைவியுடன் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த மாதம் 28-ஆம் தேதி இரவு சுமார் 7.30 மணியளவில், சிவகுமார் தனது இருசக்கர வாகனத்தில் சந்தையில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது வாழப்பந்தி ஆரம்ப சுகாதார நிலையம் அருகே மலைப்பாதையோரத்தில் தலையில் பலத்த காயத்துடன் இரத்த வெள்ளத்தில் அவர் கிடப்பதைப் பார்த்த கிராம மக்கள், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
சம்பவம் நடந்த இடத்தில் உடைந்த ஹெல்மெட் மற்றும் பாலத்தின் அடியில் கிடந்த இரும்பு ராடு ஒன்றைக் கைப்பற்றிய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். முதலில் சிவகுமாரின் மனைவியிடம் விசாரணை மேற்கொண்டபோது அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்துள்ளார். இதையடுத்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், சிவகுமாரின் மனைவி தனது கள்ளக்காதலனான சந்தோஷுடன் சேர்ந்து கணவனை கொல்ல திட்டம் தீட்டியது தெரியவந்தது.
சந்தோஷ் தனது நண்பர்கள் சிலரை அழைத்துக் கொண்டு, சிவகுமாரை வழிமறித்து இரும்பு ராடால் தலையில் பலமாக தாக்கிப் படுகொலை செய்துவிட்டுத் தப்பி ஓடியுள்ளனர். இந்த கொடூர கொலை விசாரணையில் உறுதியானதைத் தொடர்ந்து, கொலைச் சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.