உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது வழக்கறிஞர் ஒருவர் காலணி வீச முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் என அடையாளம் காணப்பட்ட நபரை நீதிமன்ற ஊழியர்கள் உடனடியாக கைது செய்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். சம்பவத்திற்கு முன்பு, “சனாதனின் அவமானத்தை பொறுத்துக்கொள்ள முடியாது” என்று கிஷோர் கத்தியதாக கூறப்படுகிறது..
எனினும் பி.ஆர். கவாய் முழுவதும் அமைதியாக இருந்தார். பின்னர், இதுபோன்ற சம்பவங்கள் தன்னைப் பாதிக்காது என்றும், நடவடிக்கைகள் தொடர அனுமதித்தார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.. டெல்லி டிசிபி மற்றும் உச்ச நீதிமன்ற பாதுகாப்பு அதிகாரிகள் தற்போது குற்றம் சாட்டப்பட்டவர்களை விசாரித்து வருகின்றனர்.
தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மத தெய்வங்கள் குறித்த கருத்துக்களுக்கு எதிர்வினையாக இந்த தாக்குதல் நடந்ததாக உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ரோஹித் பாண்டே தெரிவித்தார்.. மேலும் அவர் “இந்தச் செயலை நான் கடுமையாகக் கண்டிக்கிறேன், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன்,” என்று கூறினார்.
செப்டம்பர் 16 அன்று, ஜவாரி கோவிலில் 7 அடி உயர விஷ்ணு சிலையை புனரமைத்து மீண்டும் நிறுவ உத்தரவிடக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மனுவை நிராகரித்த நீதிமன்றம், இதை “விளம்பர நல வழக்கு” என்று கூறியது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி “இது முற்றிலும் விளம்பர நல வழக்கு… நீங்கள் கடவுளிடமே சென்று, ஏதாவது செய்யச் சொல்லுங்கள். நீங்கள் விஷ்ணுவின் தீவிர பக்தர் என்று நீங்கள் கூறினால், நீங்கள் பிரார்த்தனை செய்து தியானம் செய்யுங்கள்,” என்று கூறினார்.
இந்தப் பிரச்சனை இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் (ASI) அதிகார வரம்பிற்கு உட்பட்டது என்றும் தலைமை நீதிபதி தெரிவித்தார்.. மேலும் “இது ஒரு தொல்பொருள் கண்டுபிடிப்பு, ASI அத்தகைய செயலைச் செய்ய அனுமதிக்குமா இல்லையா… பல்வேறு சிக்கல்கள் உள்ளன,” என்று கூறினார்.
மேலும் “ நீங்கள் சைவ மதத்தை வெறுக்கவில்லை என்றால், நீங்கள் அங்கு சென்று வழிபடலாம்… கஜுராஹோவில் மிகப்பெரிய சிவலிங்கங்களில் ஒன்றான மிகப் பெரிய சிவலிங்கம் உள்ளது” என்று தலைமை நீதிபதி மேலும் கூறினார். ஆனால் அவரின் கருத்துக்கு சமூக ஊடகங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பின்னர் இதுகுறித்து பேசிய தலைமை நீதிபதி “ தனது வார்த்தைகள் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளன” என்று விளக்கினார். மேலும் அனைத்து மதங்களுக்கும் தனது மரியாதையை மீண்டும் வலியுறுத்தினார்.
Read More : டார்ஜிலிங் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 24 ஆக உயர்வு; பலர் மாயம்.. மீட்புப் பணிகள் தீவிரம்!