மகாராஷ்டிராவின் நாசிக்கில் ஒரு நபர் Bore அடித்ததால் தனது தாயை கொன்ற ஒரு அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை இரவு ஜெயில் சாலையில் உள்ள சிவாஜிநகர் பகுதியில் நடந்தது. 58 வயதான அரவிந்த் முரளி தார் பாட்டீல் தனது 80 வயது தாயார் யசோதாபாய் முரளி தார் பாட்டீலை கழுத்தை நெரித்து கொன்றார். கொலைக்குப் பிறகு, குற்றம் சாட்டப்பட்ட அரவிந்த் நாசிக் சாலை காவல் நிலையத்திற்கு சரணடையச் சென்றார்.
“எனக்கு Bore அடித்தது.. அதனால் நான் என் தாயைக் கொன்றேன். இப்போது என்னைக் கைது செய்யுங்கள்” என்று அவர் கூறினார். இதையடுத்து போலீசார் உடனடியாக அவரைக் காவலில் எடுத்து அவரின் வீட்டில் சோதனை செய்தனர்.. அப்போது போலீசார் யசோதாபாயின் உடலைக் கண்டுபிடித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது..
நாசிக் சாலை காவல் நிலையத்தில் குற்றம் சாட்டப்பட்டவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட அரவிந்த் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. அவர் திருமணமானவர், ஆனால் அவரது மனைவி அவரது மனநிலை மோசமடைந்ததால் சிறிது காலத்திற்கு முன்பு அவரை விட்டுச் சென்றார். இந்த வழக்கை போலீசார் தற்போது விசாரித்து வருகின்றனர், மேலும் குற்றம் சாட்டப்பட்டவருக்கு மருத்துவ பரிசோதனைக்கு உத்தரவிட்டுள்ளனர்.
முன்னதாக அக்டோபர் 3 ஆம் தேதி, உத்தரபிரதேசத்தின் லக்னோவில் விளையாட்டுக்கு அடிமையான ஒருவர் தனது கடனைத் திருப்பிச் செலுத்துவதற்காக நகைகளைத் திருடியபோது பிடிபட்ட பின்னர் அவரது தாயைக் கொன்றார். நிகில் ஆன்லைன் கேமிங்கிற்கு அடிமையாகி, அதில் கணிசமான பணத்தை இழந்தார் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்..
பணத்தைத் திருப்பிச் செலுத்த, அவர் தனது தாயாரின் நகைகளைத் திருட முயன்றார். அவரது தாயார் ரேஷ்மா யாதவ் அவரைக் கையும் களவுமாகப் பிடித்தார், இது இருவருக்கும் இடையே வாக்குவாதத்திற்கு வழிவகுத்தது. ஆத்திரத்தில், அவர் தனது தாயாரைக் கொன்றார்.



