திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகாவைச் சேர்ந்த கோபால் என்பவரின் மகள் யாமினி பிரியா (20). பெங்களூரு, ஸ்ரீராமபுரம் போலீஸ் எல்லைக்குட்பட்ட சுதந்திர பாளையம் பகுதியில் வசித்து வந்த யாமினி, பனசங்கரியில் உள்ள கல்லூரியில் பி.ஃபார்ம் படித்து வந்தார். வழக்கம் போல் நேற்று (அக்டோபர் 16) காலை கல்லூரிக்குச் சென்ற அவர், தேர்வை முடித்துவிட்டு மதியம் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
இந்நிலையில், மதியம் சுமார் 2 மணியளவில் மந்திரி வணிக வளாகத்தின் பின்புறமுள்ள ரயில்வே மேம்பாலம் அருகே நின்று கொண்டிருந்த யாமினியை, விக்னேஷ் என்ற இளைஞர் வழிமறித்து தகராறில் ஈடுபட்டார். சுதந்திர பாளையத்தைச் சேர்ந்த விக்னேஷ், யாமினியைக் காதலித்து வந்த நிலையில், அவரது காதலை யாமினி நிராகரித்ததே தகராறுக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
மேலும், தன்னை காதலிக்கும்படி விக்னேஷ் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதற்கு முன்பும் ஒருமுறை யாமினியின் கழுத்தில் வலுக்கட்டாயமாகத் தாலி கட்டவும் விக்னேஷ் முயன்றதாக தெரிகிறது. காதலை ஏற்க மறுத்த ஆத்திரத்தில் இருந்த விக்னேஷ், திடீரென தான் வைத்திருந்த மிளகாய் பொடியை யாமினியின் கண்களில் வீசினார்.
கண்ணில் ஏற்பட்ட எரிச்சல் தாங்க முடியாமல் யாமினி துடிதுடித்த நிலையில், விக்னேஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை சரமாரியாகக் கழுத்தில் குத்தினார். இதில் பலத்த காயமடைந்த யாமினி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கொடூர சம்பவத்தை நேரில் கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து உடனடியாகப் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஸ்ரீராமபுரம் போலீசார், மாணவி யாமினியின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், காதலை நிராகரித்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தில் விக்னேஷ் இந்த கொலையைச் செய்துள்ளார் என்பது தெரிய வந்தது. கொலையைச் செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்ற தலைமறைவாக உள்ள விக்னேஷை போலீசார் தீவிரமாக வலை வீசி தேடி வருகின்றனர்.
Read More : பெரும் சோகம்..!! உயிரை பறித்த ஒற்றை கல்..!! சாலை விபத்தில் தமிழ் சினிமா துணை நடிகர் மரணம்..!!



