தீபாவளி முடிந்து மக்கள் ஊர் திரும்ப இருக்கும் நிலையில், சிறப்பு ரயில்களை ரத்து செய்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தீபாவளிக்கு சொந்த ஊர் சென்று குடும்பத்துடன் கொண்டாடவும், பின்னர் தாங்கள் பணி செய்யும் நகரங்களுக்கு திரும்புவதற்கும் ஏதுவாக தெற்கு ரயில்வே பல்வேறு வழித்தடங்களிலும் மொத்தம் 60 சிறப்பு ரயில்களை அறிவித்தது. அதன்படி மக்கள் சிறப்பு ரயில்களை பயன்படுத்தி தற்போது சொந்த ஊர்களுக்குச் சென்று தீபாவளியை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். மேலும், மக்கள் தீபாவளியை சிறப்பாக கொண்டாடிவிட்டு, மீண்டும் திரும்புவதற்கு ஏதுவாக தமிழ்நாடு அரசு, தீபாவளி மறுநாளான அக்டோபர் 21ஆம் தேதியையும் பொது விடுமுறையாக அறிவித்துள்ளது.
அதேபோல், தீபாவளி முடிந்து பின்னரும் சில சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது. தற்போது அதில் ஆறு ரயில்களை ரத்து செய்து தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, அக்டோபர் 22ஆம் தேதி சென்னை சென்ட்ரலில் இருந்து கோட்டையம் செல்லும் 06121 சிறப்பு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல் மறுமார்க்கமான கோட்டையத்தில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு 23ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்த ரயில் எண் 06122-ம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அக்டோபர் 24 மற்றும் 26 ஆகிய இரு தேதிகளில் செங்கல்பட்டு – திருநெல்வேலி அதிவிரைவு ரயிலான 06153 ரத்து செய்யப்பட்டுள்ளது. மறுமார்க்கமான திருநெல்வேலி – செங்கல்பட்டு இடையே 24 மற்றும் 26 ஆகிய தேதிகளில் இயக்கப்பட இருந்த அதிவிரைவு ரயிலான 06154-ம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் 28ஆம் தேதி நாகர்கோயிலில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு இயக்கப்பட இருந்த 06054 விரைவு ரயிலும், மறுமார்க்கத்தில் 29ஆம் தேதி சென்னை சென்ட்ரல் முதல் நாகர்கோயிலுக்கு இயக்கப்பட இருந்த 06053 விரைவு ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ஆறு சிறப்பு ரயில்களிலும், முன்பதிவுகள் குறைவாகவே இருப்பதால் ரத்து செய்யப்பட்டிருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.



