கலியுக வரதனும் கண்கண்ட தெய்வமுமான கந்தனுக்குரிய விரதங்களில் மிகச் சிறந்த விரதம் கந்த சஷ்டி விரதம் ஆகும். மாதந்தோறும் வரும் வளர்பிறை, தேய்பிறை பட்சங்களில் இரண்டு சஷ்டி திதிகள் வந்தாலும் ஐப்பசி மாத வளர்பிறையில் வரும் சஷ்டியே கந்த சஷ்டி என போற்றப்படுகிறது. இதனை மகா சஷ்டி என்றும் குறிப்பிடுவதுண்டு. ஐப்பசி மாதம் அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறை பிரதமை திதியில் துவங்கி, சப்தமி வரையிலான 7 நாட்கள் சஷ்டி விரதம் இருக்க வேண்டும்.
சஷ்டி அன்று சூரசம்ஹாரத்தை தரிசித்த பிறகு, சப்தமி திதியில் நடைபெறும் முருகப் பெருமானின் திருக்கல்யாணத்தை தரிசித்த பிறகே விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். அவ்வகையில் இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி விரதம் இன்று (22-10-2025) தொடங்குகிறது. கந்த சஷ்டி விரதம் இருப்பவர்கள் அதிகாலையிலேயே எழுந்து குளித்து விட்டு, விரதத்தை துவக்கி விட வேண்டும்.
இதையொட்டி, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா இன்று தொடங்குகிறது. இதையொட்டி, விரதம் இருக்கும் பக்தர்கள் அங்கு குவிந்த வண்ணம் உள்ளனர். விழாவின் முக்கிய நிகழ்வான, சூரசம்ஹாரம் வரும் 27 தேதி மாலை நடைபெறவுள்ளது. திருவிழா நாட்களில் தங்கி விரதம் இருக்கும் பக்தர்களுக்கு கோயில் வளாகத்தில் 18 இடங்களில் தற்காலிக கொட்டைகள் அமைக்கப்பட்டுள்ளது.
விரதம் இருப்பது எப்படி? விரதத்திற்கு முதல் நாளன்றே வீட்டினை கழுவி சுத்தப்படுத்தி மஞ்சள் நீர் தெளித்தல் அவசியம். விரத நாளன்று அதிகாலையில் துயிலெழுந்து நீராடி, தூய்மையான ஆடைகளை அணிந்து, காலையும் மாலையும் வீட்டில் முருகனுக்கு பூஜை செய்ய வேண்டும். விரதம் இருப்பவர்கள் பகலில் தூங்கக் கூடாது. விரதம் இருக்கும் நாட்களில் கந்தசஷ்டி கவசம், கந்தகுரு கவசம், கந்தர் அலங்காரம், திருப்புகழ், கந்தர் கலிவெண்பா, பகை கடிதல், சண்முக கவசம் போன்ற பாடல்களை பாடலாம். அத்துடன் கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்தல் மிகவும் நன்று.
சஷ்டி விரதம் இருப்பதில் பல முறைகள் உள்ளன. ஒரு வேளை மட்டும் உணவு எடுத்துக் கொண்டு விரதம் இருப்பது, ஒரு வேளை மட்டும் உணவை தவிர்த்து விரதம் இருப்பது, சுவாமிக்கு நைவேத்தியம் செய்த அல்லது அபிஷேகம் செய்த ஒரு டம்ளர் பாலை மட்டும் ஒரு நாளில் எடுத்துக் கொண்டு விரதம் இருப்பது, பால், பழம் சாப்பிட்டு விரதம் இருப்பது, வெறும் தண்ணீர் மட்டும் குடித்து விரதம் இருப்பது என பல வகைகள் உண்டு. இவற்றில் தங்களுக்கு ஏற்ற முறையை தேர்வு செய்து விரதம் இருக்கலாம். அவரவரின் உடல்நிலை மற்றும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு விரதம் இருக்கலாம்.
கந்தசஷ்டி விரதத்தின் பலன்: குடும்பத்தில் துன்பங்கள் நீங்கவும், வேலைவாய்ப்பு, கடன் தொல்லை நீங்கவும் இவ்விரதத்தை கடைப்பிடிப்பது நன்று. “சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்” என்பது பழமொழி. இதன் உண்மையான பொருள், சஷ்டியில் விரதமிருந்தால் கருப்பையில் குழந்தை உண்டாகும் என்பதாகும். எனவே குழந்தை வரம் வேண்டும் பெண்களுக்கு இது மிகவும் சிறந்த விரதமாகும். சுருக்கமாகச் சொன்னால் இவ்விரதத்தை கடைப்பிடித்து விரும்பிய பலனைப் பெறலாம் என்பது நம்பிக்கை.
Readmore: பக்தர்களின் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வரும் கொட்டன்குளக்கரா பகவதி அம்மன்..! இத்தனை சிறப்புகளா..?



