பீகார் மாநிலத்தில் செங்கல் சூளை அதிபர் ஒருவர், அரசு வேலை கிடைத்த இளைஞரை 24 மணி நேரத்தில் கடத்தி துப்பாக்கி முனையில் தன் மகளுக்கு தாலி கட்ட வைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டதைச் சேர்ந்தவர் கௌதம் குமார். இவர் பீகார் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வில் தேர்ச்சி பெற்று அரசு பள்ளி ஆசிரியராக பணியில் சேர்ந்தார். இவருக்கு படேபூரின் ரெபுராவில் உள்ள உத்கிராமித் மத்திய வித்யாலயா பள்ளியில் பணி வழங்கப்பட்டுள்ளது. ஆசிரியர் கௌதம் குமாருக்கு அரசு வேலை கிடைத்த 24 மணி நேரத்தில், பள்ளிக்கு வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் அவரை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றனர். செங்கல் சூளை அதிபரான ராஜேஷ் ராய் என்பவரின் ஆட்கள் தான் கௌதம் குமாரை துப்பாக்கி முனையில் கடத்திக் கொண்டு சென்றனர். செங்கல் சூளை அதிபரான ராஜேஷ் ராய் துப்பாக்கி முனையில் வைத்து, தனது மகள் சாந்தினிக்கு தாலி கட்டுமாறு ஆசிரியர் கௌதம் குமாரை கட்டாயப்படுத்தி உள்ளார். அவரும் பயந்து போய் தாலி கட்டினார்.
இந்த சம்பவம் குறித்து பீகார் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கௌதம் குமார் போல் பீகாரில் அடிக்கடி இளைஞர்கள் கடத்தி செல்லபட்டு திருமணம் செய்து வைக்கப்படுகிறார்கள். நல்ல வேலையில் உள்ளவர்கள், அரசு வேலையில் உள்ளவர்கள் தான் இப்படி கடத்தப்படுகிறார்கள். பீகாரில் ‘பகத்வா விவா’ (மணமகன் கடத்தல் ) என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. அண்மையில் பீகாரின் பெகுசரையில். கால்நடை மருத்துவரை கடத்தி சென்று வலுக்கட்டாயமாக பெண் ஒருவர் திருமணம் செய்து கொண்டார். இதுபோன்ற சம்பவங்கள் பீகாரில் அடிக்கடி நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.