திருவாரூர் மாவட்டம், மருதப்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன்குமார் (வயது 21). பட்டதாரியான இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த ஜெயஶ்ரீ (வயது 19) என்ற பெண்ணுடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக இருவரும் காதலித்து வந்துள்ளனர்.
சமீபத்தில் ஜெயஶ்ரீ இந்த காதலை தொடர விரும்பவில்லை என்று தெரிவித்தார். இதனை ஏற்க மறுத்த பிரவீன், காதலை தொடர வேண்டும் என்று அழுத்தம் கொடுத்துள்ளார். இந்த நிலையில் பிரவீன் ஜெயஸ்ரீ இருவரும் நேற்று திருவாரூர் திருக்கண்ணமங்கை அருகே உள்ள சேட்டாகுளம் கரை அருகே சந்தித்து அமர்ந்து பேசி வந்தனர்.
அப்போது ஜெயஶ்ரீ, வீட்டில் பெற்றோர் அனுமதிக்க மாட்டார்கள். அதனால் நம் காதலை தொடர வேண்டாம் என்று மீண்டும் அழுத்தமாக கூறியுள்ளார். இதில் மனமுடைந்த பிரவீன், திடீரென ஓடி சென்று அருகில் உள்ள குளத்தில் குதித்துவிட்டார். இதை எதிர்பார்க்காத ஜெயஶ்ரீ, அவரைக் காப்பாற்றுவதற்காக குளத்தில் இறங்கியுள்ளார்.
இதைப் பார்த்து அருகில் இருந்தவர்கள் தீயணைப்புத்துறை, காவல்துறையினருக்கு தகவல் கொடுத்து மீட்க முயற்சி செய்துள்ளனர். இருவரையும் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதில் பிரவீன்குமார் சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தார். ஜெயஶ்ரீக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து குடவாசல் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Read more: நட்பு என்பது பாலியல் வன்கொடுமைக்கான உரிமம் அல்ல : முன்ஜாமீன் மனுவை நிராகரித்த டெல்லி உயர்நீதிமன்றம்!



