கோவை மாவட்டம் செட்டிப்பாளையம் அடுத்த சிறுவாணி சாலையில் நேற்றிரவு நடந்த கோர விபத்தில் 4 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிகழ்வு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த விபத்தில் ஒரு இளைஞர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நண்பர்களிடையே நடந்த பிறந்தநாள் கொண்டாட்டம், அதிவேகம் மற்றும் மது போதை காரணமாக துயரத்தில் முடிந்துள்ளது.
இந்த விபத்து குறித்த முதற்கட்ட விசாரணையில், நேற்று இரவு அதிவேகமாகச் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் பயங்கரமாக மோதியுள்ளது. இந்த கோர சம்பவத்தில், காரில் பயணம் செய்த பிரகாஷ் (22), ஹரிஷ் (21), சபரி (21), அகத்தியன் (20) ஆகிய நான்கு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களுடன் பயணம் செய்த பிரபாகரன் (19) என்ற மற்றொரு இளைஞர் படுகாயமடைந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், படுகாயமடைந்த பிரபாகரனை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த 4 நண்பர்களும் ஒருவரது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக பயணம் மேற்கொண்டிருந்ததும், அப்போது மதுபோதையில் காரை அதிவேகமாக ஓட்டியதே விபத்துக்கு முக்கியக் காரணம் என்பதும் தெரியவந்துள்ளது.
மேலும், உயிரிழந்தவர்களில் இருவர் தஞ்சாவூரைச் சேர்ந்தவர்கள். இவர்களில் சிலர் கோவையில் உள்ள தனியார் கார் வாஷிங் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளனர். இவர்கள், கார் வாஷிங்கிற்காக வந்திருந்த ஒரு காரை, பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காகப் பயன்படுத்த எடுத்துச் சென்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.



