வாரத்திற்கு ஒருமுறை மது அருந்துவதால் பெரிய அளவில் எந்தப் பிரச்சனையும் ஏற்படப் போவதில்லை என்று பலர் நினைக்கின்றனர். ஆனால், இந்த பழக்கம் கூட உங்கள் ஆரோக்கியத்தில் நீண்டகாலத் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
ஃபரிதாபாத்தில் உள்ள யாதர்த் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் உள் மருத்துவம் மற்றும் வாதவியல் துறை இயக்குநர் டாக்டர் ஜெயந்தா தாகுரியா அளித்த பேட்டியில், “அரிதான சமயங்களில் நீங்கள் அதிகப்படியாக மது குடித்தாலும், அது உங்கள் முக்கிய உறுப்புகள் மற்றும் உடல் அமைப்புகளில் தேவையற்ற அழுத்தத்தை ஏற்படுத்தும்” என்று குறிப்பிடுகிறார்.
குறுகிய காலத்தில் அதிக அளவு மது அருந்துவது, கடுமையான மதுபானம் தொடர்பான கல்லீரல் நோய், இருதயச் சிக்கல்கள் மற்றும் உயிரிழப்புகளுக்குக் கூட வழிவகுக்கும் என்று அவர் எச்சரிக்கிறார்.
கல்லீரல் மற்றும் சிறுநீரகம் : வாரத்திற்கு ஒருமுறை மது அருந்துவது கல்லீரலைச் சிரமப்படுத்தும். காலப்போக்கில், இது கொழுப்பு கல்லீரல் அல்லது கடுமையான கல்லீரல் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கலாம். மதுபானத்தால் தூண்டப்படும் நீரிழப்பு சிறுநீரகங்களின் செயல்பாட்டையும் பாதிக்கக்கூடும்.
இதயம் மற்றும் ரத்த ஓட்டம் : இருதய அமைப்பில் மதுவின் தாக்கம் குறிப்பிடத்தக்கது. இது ரத்த அழுத்தத்தை அதிகரிப்பதுடன், ஒழுங்கற்ற இதயத் துடிப்புகளுக்கும் வழிவகுக்கும். குடிப்பழக்கத்துடன் புகைப்பிடிப்பது, இதய நோய்க்கான அபாயத்தை மேலும் அதிகரிக்கிறது.
உடல் எடை மற்றும் செரிமானம் : மதுபானத்தில் கலோரிகள் நிறைந்துள்ளதால், அதைச் சிற்றுண்டிகளுடன் உட்கொள்வது காலப்போக்கில் எடை அதிகரிக்க வழிவகுக்கும். இது வயிற்று உப்புசத்தை ஏற்படுத்துவதோடு, வளர்சிதை மாற்றச் செயல்முறைகளையும் சீர்குலைக்கிறது. மேலும், அதிக அளவில் மது குடிப்பது செரிமான அமைப்பை எரிச்சலடையச் செய்து, அமில ரிஃப்ளக்ஸ் மற்றும் தீவிர சந்தர்ப்பங்களில் இரைப்பைக் குடல் ரத்தப்போக்கு அல்லது இரத்த வாந்திக்கும் வழிவகுக்கும்.
தூக்கம் : ஆரம்பத்தில் தூக்கத்தை வரவழைத்தாலும், நாளடைவில் மது அருந்துவது, தூக்கத்தின் மறுசீரமைப்பு நிலைகளைச் சீர்குலைத்து, மறுநாள் காலை சோர்வு மற்றும் அமைதியின்மைக்கு வழிவகுக்கிறது.
யார் தவிர்க்க வேண்டும்..?
கர்ப்பிணிப் பெண்கள், கல்லீரல் நோய், இருதயப் பிரச்சனைகள், அல்லது மனநல கோளாறுகள் உள்ளவர்கள், குறிப்பிட்ட மருந்துகளை உட்கொள்பவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கட்டாயமாக மதுவை தவிர்க்க வேண்டும்.
வாரத்திற்கு ஒருமுறை மது அருந்துவது பாதிப்பற்றது எனத் தோன்றினாலும், அதன் அபாயங்களைப் புரிந்துகொள்வது அவசியம். எப்போதாவது மிதமாக மது அருந்துவது பெரும்பாலான நபர்களுக்குப் பெரிய தீங்கு விளைவிப்பதில்லை என்றாலும், குடிப்பதற்கான பொறுப்புணர்வும், அதன் விளைவுகள் குறித்த அறிவும் இன்றியமையாதது என்று மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.



