இந்த உலகம் நம்பிக்கை மற்றும் நாத்திகம் என்ற இரண்டு துருவங்களில் இயங்குகிறது. இறைவன் இருக்கிறாரா இல்லையா என்ற விவாதம் ஒருபுறம் நடந்தாலும், கண்ணுக்குத் தெரியாத ஒரு சக்தி நம்மை விடவும், நாம் நினைப்பதை விடவும் பிரபஞ்சத்தில் இயங்குகிறது என நம்புபவர்களே அதிகம். இந்த நம்பிக்கையின் முக்கிய அங்கம் தான் ‘சாமி ஆடுதல்’ மற்றும் ‘அருள்வாக்கு’ கூறுவது. இறைநம்பிக்கை அற்றவர்கள் இதை மோசடி என்றும், ஆதாயத்துக்காக ஏமாற்றுவதாகவும் விமர்சிப்பதுண்டு.
இந்தச் சூழலில், யாருக்குச் சாமி வரும், ஏன் சிலருக்கு மட்டும் அருள்வாக்கு சொல்லும் ஆற்றல் கிடைக்கும், சிலருக்கு சாமி வந்தும் பேச முடிவதில்லை, மேலும் ஒருவருக்குள் வருவது நல்ல சக்தியா அல்லது கெட்ட சக்தியா என்பதற்கான கேள்விகளுக்கு ஸ்வஸ்திக் சித்த தாய் சுவாரஸ்யமான விளக்கங்களை அளித்துள்ளார்.
சாமி வரவழைக்கும் 4 முறைகள் :
அருள் அல்லது ஆவேசத்தை வரவழைக்கப் பொதுவாக 4 முக்கிய முறைகள் பழங்காலத்தில் இருந்து பின்பற்றப்படுகின்றன:
வர்ணித்து வரவழைத்தல் : அந்தந்த தெய்வத்துக்கு உகந்த பாடல்களைப் பாடி, மனமுருகி அழைப்பதன் மூலம் சாமியை வரவழைப்பது.
உடுக்கை அடித்து வரவழைத்தல் : உடுக்கை அல்லது குறிப்பிட்ட இசைக் கருவிகளின் சப்தத்தின் மூலம் ஆவேசத்தை வரவழைத்தல்.
தன்னை மீறி ஆனந்தமாக ஆடுதல் : இந்த முறையில் சாமியானது தன்னை அறியாமலேயே, ஆனந்தமாகக் கட்டுக்குள் இன்றி உடலினுள் வந்து ஆடும். இவர்களுக்கு என்ன நடந்தது என்று கூட பின்னர் நினைவில் இருக்காது. இவர்களில் சிலர் அருள்வாக்கு கூறுவார்கள். சிலர் ஆடிவிட்டு அப்படியே நின்றுவிடுவார்கள்.
கெட்ட சக்தி ஆடுதல் : சில நேரங்களில் சிலருக்குக் கெட்ட சக்தியும் உடம்பில் இறங்கி ஆடுவதுண்டு. ஆனால், இவர்கள் கோவில் சன்னிதானத்துக்குள் சென்று ஆட மாட்டார்கள், வெளியே ஒதுங்கிய இடங்களில்தான் ஆடுவார்கள். இவர்களிடம் எலுமிச்சைப் பழம் அல்லது வேப்பிலையைக் கொடுத்தால் அவற்றை வாங்க மறுப்பார்கள்.
ஆதிகாலத்திலிருந்தே தேவர்கள் ஒருவரின் நல்லது கெட்டதை ஜாதக ரீதியாகக் கணித்து அருள்வாக்கு கூறுவது உண்டு. ஊர் பண்டிகை, கிராமங்களில் மழை வேண்டி நடக்கும் பஞ்சாயத்து போன்ற சமயங்களில் சாமி வரவழைத்து அருள்வாக்கு கேட்பது இன்றும் வழக்கத்தில் உள்ளது.
ஒருவர் சொல்லும் அருள்வாக்கு நிச்சயம் பலிக்க வேண்டும் என்றால், அவர் ஆன்மீக நாட்டமும், முறையான இறைவழிபாடும், தியானம், தவம் செய்பவராகவும் இருக்க வேண்டும். அப்படி இல்லாதவர்கள் சொல்லக்கூடிய வாக்கு பெரும்பாலும் பலிப்பதில்லை.
சிலர் உண்மையாகவே சாமி வராவிட்டாலும், தமக்குச் சாமியாடுவது போலப் பாவனை செய்வார்கள். தன் மீது மரியாதை வர வேண்டும், மக்களை நம்ப வைக்க வேண்டும் என்பதற்காக இவ்வாறு நடந்து கொள்பவர்களும் உண்டு.
அதேபோல், சிலர் தன் கஷ்டம் தீர வரும் அப்பாவி மக்களுக்கு மேலும் பயத்தையும் கஷ்டத்தையும் தரும் வகையில் தவறான பலன்களைக் கூறுவதுண்டு. ஆனால், யார் ஒருவர் நல்ல செயல்களையும், நல்லனவைகளையும் செய்கிறாரோ, அவருக்கு நல்லதே நடக்கும். ஒருவர் அருள்வாக்கு கூறவோ அல்லது ஜாதகம் பார்த்துப் பலன் சொல்லவோ வேண்டுமென்றால், அவருக்குக் கட்டாயம் தெய்வத்தின் அருள் இருப்பது அவசியம் என ஸ்வஸ்திக் சித்த தாய் அம்மா அவர்கள் விளக்கியுள்ளார்.
Read More : தமிழகம் முழுவதும் இன்று ஒரு நாள் மட்டும் பத்திரப் பதிவு அலுவலகத்தில் கூடுதல் டோக்கன்…!



