திருப்பூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ஈஸ்வரமூர்த்தி(41). இவரது மனைவி பாலாமணி. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் பெங்களூருவில் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். மேலும் வரக்காளிபாளையத்தை சேர்ந்த உறவினரான ரியல் எஸ்டேட் அதிபர் ராஜ்குமார் என்பவருடன் சேர்ந்து கூட்டாக ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார்.
இருவரும் திருப்பூர் மாவட்டம் நம்பகவுண்டம்பாளையத்தில், நிலம் வாங்கி வீட்டுமனையாக பிரித்துள்ளார்கள். அப்போது இருவருக்கும் இடைஏ தகராறு ஏற்பட்டுள்ளது. தீபாவளி முடிந்த நிலையில் ஈஸ்வர மூர்த்தி பெங்களூர் செல்ல புறப்பட்டார். பேருந்து நிலையத்திற்கு அவரது தந்தை கிருஷ்ணமூர்த்தி உடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
இவர்களை பின் தொடர்ந்து வந்த கார் கண் இமைக்கும் நேரத்தில் ஈஸ்வரமூர்த்தி ஓட்டிச்சென்ற ஸ்கூட்டர் மீது பயங்கரமாக மோதியிருக்கிறது. இதனால் நிலை குலைந்து இருவரும் கீழே விழுந்தனர். காரில் இருந்து இறங்கி வந்த ராஜ்குமார் ‘நீ இன்னும் சாகலையா’ என்று கூறி இரும்பு கம்பியால் ஈஸ்வரமூர்த்தியின் தலையில் தாக்கியுள்ளார். ஆத்திரம் அடங்காத ராஜ்குமார் சினிமா பாணியில் காரை முன்னும், பின்னும் இயக்கி ஈஸ்வரமூர்த்தி மீது ஏற்றியுள்ளார்.
தந்தையின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவரவும், ராஜ்குமார் காரை அங்கேயே நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் தந்தை, மகனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஈஸ்வரமூர்த்தியை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக கூறினார்கள். அவரது தந்தை மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவத்தை கொலை வழக்காக பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள ராஜ்குமாரை தீவிரமாக தேடி வருகிறார்கள்.



