நாட்டின் பொதுத்துறை வங்கிகளில் கிளர்க் பணிக்கான காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 13 ஆயிரத்து 533ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.. அதில் தமிழ்நாட்டில் மட்டும் 1,161 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
காலிப்பணியிடங்கள்:
- பரோடா வங்கி – 105
- இந்தியா வங்கி – 20
- மகாராஷ்டிரா வங்கி – 40
- கனரா வங்கி – 450
- சென்டரல் பேங்க் ஆஃப் இந்தியா – 127
- இந்தியன் வங்கி – 235
- இந்தியன் ஓவர்சீஸ் வங்கி – 50
- பஞ்சாப் தேசிய வங்கி – 70
- பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி – 30
- யுசிஓ வங்கி – 22
- யூனியன் வங்கி – 12
- மொத்தம் – 1,161
வயது வரம்பு: 20 முதல் 28 வயது உடைய பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அரசு விதிகளின்படி தளர்வுகள் உண்டு.
கல்வித் தகுதி:
* அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
* அந்தந்த மாநிலத்திற்கான உள்ளூர் மொழியை அறிந்திருக்க வேண்டும்.
சம்பளம்: தேர்வாகும் நபர்களுக்கு ரு.24,050 முதல் ரூ.64,480 வரை என்ற அடிப்படையில் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை: முதலில் முதல்நிலைத் தேர்வு மற்றும் பின்னர் முதன்மைத் தேர்வு என இரண்டு கட்டங்களாக நடைபெறும். இரண்டும் கொள்குறி (Objective Type) முறையில் நடைபெறும்.
முதல்நிலைத் தேர்வில் ஆங்கிலம், நுண்ணறிவு மற்றும் பகுத்தறிவு திறன் ஆகிய மூன்று பிரிவுகளில் மொத்தம் 100 கேள்விகள் – 100 மதிப்பெண்கள் வழங்கப்படும். இதில் நிர்ணயிக்கப்பட்ட கட்-ஆஃப் மதிப்பெண்களை எட்டிய தேர்வர்கள் மட்டுமே முதன்மைத் தேர்வுக்கு தகுதி பெறுவார்கள்.
முதன்மைத் தேர்வில் பொது விழிப்புணர்வு, ஆங்கிலம், நுண்ணறிவு, பகுத்தறிவு ஆகியவற்றின் அடிப்படையில் 155 கேள்விகள் – 200 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும். இதில் தமிழ் மொழியிலும் தேர்வெழுத அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
முதன்மைத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் இறுதி தேர்வு பட்டியல் வெளியிடப்படும். பின்னர், தேர்வர்கள் மொழித் திறன் தகுதித் தேர்வு (Language Proficiency Test) யில் தேர்ச்சி பெற வேண்டும்.
முதல்நிலை தேர்வு முடிவுகள்: IBPS கிளார்க் பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு கடந்த அக்டோபர் 4 மற்றும் 5 தேதிகளில் நடைபெற்றது. இதற்கான முடிவுகள் விரைவில் வெளியாக உள்ளன. நவம்பர் 29-ம் தேதி முதன்மைத் தேர்வு நடைபெற உள்ள நிலையில், காலிப்பணியிடங்கள் 10,277 இலிருந்து 13,533 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதால், தேர்வர்களிடையே நம்பிக்கை உருவாகியுள்ளது.



