கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் சடையமங்கலம் அருகே வைகல் பகுதியைச் சேர்ந்தவர் சஜீர். இவரது மனைவி ரஜிலா கஃபூர் (36). நேற்று காலை வீட்டில் இருந்த சஜீர், தனது மனைவி ரஜிலாவிடம் சில வினோதமான கோரிக்கைகளை வைத்துள்ளார். அதன்படி, ரஜிலா தனது கூந்தலை தளர்த்திவிட்டு, தனக்கு முன்னால் அமர வேண்டும் என்றும், ஒரு மாந்திரீகர் கொடுத்த ஆபரணத்தை அணிந்து, சாம்பலை முகத்தில் பூச வேண்டும் என்றும் அவர் வற்புறுத்தியுள்ளார்.
ஆனால், இந்தக் கோரிக்கைக்கு ரஜிலா சம்மதம் தெரிவிக்க மறுத்துள்ளார். கடந்த சில காலமாக சஜீர் மாந்திரீகம் மற்றும் சடங்குகளில் அதிக ஈடுபாடு காட்டி வந்ததாக கூறப்படுகிறது. மனைவி தனது பேச்சை கேட்க மறுத்ததால் கோபத்தின் உச்சிக்குச் சென்ற சஜீர், சமையலறையில் அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த மீன் குழம்பு சட்டியுடன் தூக்கி வந்து, ரஜிலாவின் முகத்தில் ஊற்றித் தாக்கியுள்ளார்.
இதையடுத்து, ரஜிலாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து, காயமடைந்த அவரை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. சஜீர் தனது மனைவியைப் பிசாசு பிடித்திருப்பதாக நம்பி, பலமுறை அவரைத் தாக்கி வந்துள்ளார்.
இது தொடர்பாக ரஜிலா ஏற்கனவே காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். அப்போது சஜீரை எச்சரித்த போதிலும், அவர் மாந்திரீகர்களை அணுகி, மனைவிக்குச் சூனியம் செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது. தற்போது, இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தலைமறைவான சஜீரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
Read More : கரூரில் சோகம்..!! நிலைதடுமாறிய மினி லாரி..!! சக்கரத்தில் சிக்கி துடிதுடித்து உயிரிழந்த 3 தொழிலாளர்கள்..!!



