நியூசிலாந்தில் புகழ்பெற்ற உணவக நிறுவனமான ஹெல் பீட்சா (Hell Pizza) கடந்த 2023 ஆம் ஆண்டு உலகின் கவனத்தை ஈர்த்த ஒரு வினோத திட்டத்தை அறிமுகப்படுத்தியது. வாடிக்கையாளர்கள் பீட்சாவை உடனடியாக ஆர்டர் செய்து உண்ணலாம், ஆனால் அதற்கான கட்டணத்தை அவர்கள் இறந்த பிறகு செலுத்தினால் போதும் என்ற திட்டமே அது. இந்த திட்டம் “ஆஃப்டர்லைஃப் பே” (After Life Pay) என அழைக்கப்படுகிறது.
ஆரம்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்திய இந்த திட்டமானது, உண்மையில் ஒரு விளம்பர யுக்தி ஆகும். “பை நவ், பே லேட்டர்” (Buy Now, Pay Later) என்ற கலாசாரம் நியூசிலாந்து மக்களை எந்த அளவு பாதிக்கிறது என்பதை காட்டுவதே இதன் முக்கிய நோக்கம் என ஹெல் பீட்சாவின் சிஇஓ பென் கம்மிங் தெரிவித்தார். இந்த திட்டத்தின் கீழ் மறைமுக கட்டணங்களோ அபராதங்களோ இல்லை என்றும் அவர் உறுதிப்படுத்தினார்.
இந்த வினோத வாய்ப்பு, முதலில் நியூசிலாந்தில் 666 வாடிக்கையாளர்களுக்கும், பின்னர் ஆஸ்திரேலியாவில் 666 வாடிக்கையாளர்களுக்கும் மட்டுமே வழங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட 18 வயதுக்கு மேற்பட்ட வாடிக்கையாளர்கள், தங்கள் வாழ்நாள் முழுவதும் பீட்சாவை சாப்பிட்டாலும், ஒரு பைசா கூட இப்போது செலுத்த தேவையில்லை.
இதற்காக விண்ணப்பிக்கும் வாடிக்கையாளர்கள், தங்கள் மரணத்திற்குப் பிறகு பணம் செலுத்துவதற்கு சட்டப்பூர்வமாக செல்லுபடியாகும் ஒரு பிரத்தியேக ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும். அதாவது, வாடிக்கையாளர் இறந்த பிறகு, அவரது வங்கிக் கணக்கில் இருந்து பில் செலுத்தப்படும். ஒருவேளை வங்கிக் கணக்கில் பணம் இல்லையென்றால், அத்தொகையை குடும்பத்தினர் செலுத்த வேண்டும் என்றும் அந்த ஒப்பந்தத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும், நியூசிலாந்தின் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரிகள் இந்த திட்டம் குறித்து அப்போது எச்சரித்தனர். இது கடன் சிக்கல்களுக்கும், உணவு அடிமைத்தனத்திற்கும் வழிவகுக்கும் என்றும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.



