தீபாவளி, சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை போன்ற தொடர் பண்டிகை விடுமுறைகளுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் வழக்கமான செயல்பாடுகளுக்கு திரும்பியுள்ளன. மாணவர்கள் விரைவில் தங்களது இரண்டாம் இடைப்பருவத் தேர்வுகளை எதிர்கொள்ள இருக்கின்றனர். இத்தேர்வுகள் நவம்பர் மாதத்தின் இரண்டாம் வாரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அதைத் தொடர்ந்து டிசம்பர் மாதத்தில் அரையாண்டுத் தேர்வுகளும் நடைபெற உள்ளன.
இந்த சூழலில், வழக்கமாக பண்டிகை விடுமுறைகள் நிறைந்திருக்கும் மற்ற மாதங்களை காட்டிலும், நவம்பர் மாதத்தில் பெரிய பண்டிகைகள் எதுவும் இல்லாததால், மாணவர்களுக்கு கூடுதல் விடுமுறை வாய்ப்பு குறைந்துள்ளது. இருப்பினும், கடந்த அக்டோபர் மாத இறுதியில் ஏற்பட்ட மோந்தா புயல் காரணமாக சில மாவட்டங்களில் விடப்பட்ட விடுமுறையை கருத்தில் கொண்டு, இந்த நவம்பர் மாதச் சனிக்கிழமைகளில் பள்ளிகள் வேலை நாட்களாக செயல்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
மொத்தமாக பார்க்கும்போது நவம்பர் மாதத்தில் வார இறுதி நாட்களான நவம்பர் 1, 2, 8, 9, 15, 16, 22, 23, 29 மற்றும் 30 ஆகிய 10 நாட்கள் மட்டுமே பள்ளிகளுக்கு விடுமுறை நாட்களாக இருக்கும். இதனால், நவம்பரில் மொத்தமாக 20 நாட்கள் வேலை நாட்களாக இருக்கும் என கணக்கிடப்படுகிறது.
உள்ளூர் விடுமுறை :
பண்டிகை விடுமுறைகள் இல்லாவிட்டாலும், சில மாவட்டங்களில் முக்கிய உள்ளூர் விழாக்களை முன்னிட்டு விடுமுறை அளிக்கப்படுகிறது. உதாரணமாக, நவம்பர் 1ஆம் தேதி ராஜராஜ சோழன் சதய விழாவை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
அதேபோல், வரவிருக்கும் நவம்பர் 6-ஆம் தேதி நாகப்பட்டினம் சிக்கல் சிங்காரவேலர் தேரோட்டம், நவம்பர் 13 அன்று திருவாரூர் முத்துப்பேட்டை பெரிய கல்லூரி திருவிழா, நவம்பர் 15 அன்று மயிலாடுதுறை காவிரி கடைமுகத் தீர்த்தவாரி போன்ற முக்கியத் திருவிழாக்களுக்காக அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் உள்ளூர் விடுமுறையை அறிவிக்க வாய்ப்புள்ளது.
மாணவர்களுக்கு இந்த மாதத்தில் ஒரே ஆறுதலாக இருக்கப் போவது நவம்பர் 14ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள குழந்தைகள் தினம் தான். முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளான இந்நாளில் விடுமுறை அளிக்கப்படாவிட்டாலும், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவர்களுக்காகப் பல்வேறு சிறப்புப் போட்டிகளும் நிகழ்ச்சிகளும் நடத்தப்படும்.
இந்த ஆண்டு நவம்பர் 14 வெள்ளிக்கிழமை வருவதால், குழந்தைகள் தினத்தை உற்சாகமாகக் கொண்டாடும் மாணவர்கள், அடுத்த இரண்டு நாட்களான நவம்பர் 15 மற்றும் 16 ஆகிய வார இறுதி விடுமுறைகளை கொண்டாடலாம். மேலும், குழந்தைகள் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், நவம்பர் 15 முதல் 22 ஆம் தேதி வரை குழந்தைகள் வாரமாக அனுசரிக்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.



