கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த 44 வயது இஸ்லாமிய நபர் 38 வயது பெண்ணை 2வதாக திருமணம் செய்து கொண்டார். ஆனால், முதல் மனைவி உயிருடன் இருக்கும் நிலையில், 2வது திருமணத்தை பதிவு செய்ய பதிவுத்துறை அலுவலக அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். உடனே இதை எதிர்த்து கேரள உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
அந்த மனுவில், “இஸ்லாமிய சட்டத்தின்படி ஒரு ஆண் 4 பெண்களை திருமணம் செய்ய அனுமதி உள்ளதால், தன்னுடைய 2-வது திருமணத்தை பதிவு செய்ய அனுமதி அளித்து உத்தரவிட வேண்டும்” என்று கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், “முதல் மனைவியின் சம்மதம் இல்லாமல், ஒரு இஸ்லாமிய ஆண் இரண்டாவது திருமணத்தை பதிவு செய்ய முடியாது.
திருமணத்தை பதிவு செய்வதற்கு முன்பு, முதல் மனைவியின் கருத்தை கேட்க வேண்டும். அவர் எதிர்ப்பு தெரிவித்தால், அந்த திருமணத்தை பதிவு செய்யக் கூடாது. அடிப்படை உரிமைகள் என்பது மத உரிமைகளை விட முக்கியமானவை,” என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியது. மேலும், “இஸ்லாமிய சட்டத்தின்படி ஒரு ஆண் ஒருவருக்கு மேற்பட்ட மனைவிகளை சமமாக நடத்தும் திறன் இருந்தாலேயே பல திருமணம் அனுமதிக்கப்படுகிறது.
ஆனால் அந்த சமத்துவம் நடைமுறையில் சாத்தியமில்லை. ஒரு இஸ்லாமிய பெண் தன்னுடைய கணவரின் இரண்டாவது திருமணத்தில் வெறும் பார்வையாளராக அமைதியாக இருப்பதை அனுமதிக்க முடியாது ” எனவும் கூறிய நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர். இந்தத் தீர்ப்பு, மதச் சட்டங்களும், பெண்களின் அடிப்படை உரிமைகளும் இடையே சமநிலையை வகுத்து காட்டும் ஒரு முக்கிய நீதிமுறை முடிவாகப் பார்க்கப்படுகிறது.



