சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலையான மின்சாரத் தேவையை உறுதி செய்யும் வகையில், நாட்டின் ஒரு கோடி வீடுகளுக்கு சூரிய மின்சக்தியை அளிக்கும் பிரம்மாண்டமான திட்டமான ‘பிரதம மந்திரி சூரிய சக்தி – இலவச மின்சார திட்டம்’ (PM Surya Ghar: Muft Bijli Yojana) மத்திய அரசால் ரூ. 75,000 கோடி முதலீட்டில் செயல்படுத்தப்படுகிறது. இந்தக் கூரை சூரிய மின்சக்தி திட்டம் மூலம், வீடுகளுக்கு மாதந்தோறும் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் அளிக்கப்பட்டு, கோடைக் காலத்தில் ஏற்படும் அதிக மின்கட்டணச் சுமையில் இருந்து மக்களுக்கு நிரந்தரத் தீர்வு வழங்கப்படுகிறது.
வீட்டு மாடியில் சோலார் தகடுகளை நிறுவும் இத்திட்டத்தின் மூலம், ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு சுமார் ரூ. 15,000 முதல் ரூ. 18,000 வரை மின் கட்டணச் சேமிப்புக் கிடைக்கும். மேலும், வீட்டு உபயோகத்திற்கு போக மீதமுள்ள மின்சாரத்தை மாநில மின்சார வாரியத்திற்கே விற்பதன் மூலம் மக்கள் கூடுதல் வருவாயையும் பெற முடியும்.
மத்திய அரசின் இந்த PM சூர்யா கர் யோஜனா திட்டத்தின்கீழ், மக்கள் அதிகபட்சமாக ரூ. 78,000 வரை மானியமாகப் பெற முடியும். இந்த மானியம், பயனாளியின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. குறைந்த செலவில் இந்த அமைப்பை நிறுவ அதிக சலுகையுடன் கூடிய வங்கிக் கடனும் கிடைக்கிறது.
விண்ணப்பிக்கும் எளிய வழிமுறைகள் :
* இத்திட்டத்தின் பலன்களைப் பெற விரும்பும் மக்கள், https://pmsuryaghar.gov.in என்ற ஒருங்கிணைந்த தேசிய ஆன்லைன் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
* இணையதளத்தில், உங்கள் மாநிலம், மின் சேவை நிறுவனம், மின்சார எண் மற்றும் மொபைல் எண்ணைப் பயன்படுத்திப் பதிவு செய்ய வேண்டும்.
* பதிவு செய்த பிறகு, மின்சார எண் மற்றும் மொபைல் எண்ணைப் பயன்படுத்தி இணையதளத்தில் உள்நுழைந்து, சோலார் நிறுவுவதற்கான விண்ணப்பத்தை நிரப்ப வேண்டும்.
* மின் சேவை நிறுவனத்தின் ஒப்புதல் கிடைத்த பிறகு, மின்சார வாரியத்தில் பதிவு செய்துள்ள எந்த ஒரு நிறுவனத்தின் மூலமாகவும் உங்கள் வீட்டில் சோலார் தகடுகளை நிறுவலாம்.
* நிறுவிய பின், விவரங்களைப் பதிவு செய்து மீட்டருக்காக விண்ணப்பிக்க வேண்டும். மீட்டர் நிறுவப்பட்டு, மின் சேவை நிறுவனம் ஆய்வு செய்து அனுமதிச் சான்றிதழை வழங்கும்.
* அடுத்து, உங்கள் வங்கிக் கணக்கு விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்த 30 நாட்களுக்குள் மானியத் தொகை உங்கள் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
* ஆரம்ப முதலீடு அதிகமாக இருந்தாலும், ஓரிரு ஆண்டுகளில் அந்தச் செலவை மீட்டெடுத்து விடலாம் என்பதால், நகரங்களிலும் கிராமப்புறங்களிலும் மக்கள் இந்தச் சுற்றுச்சூழலுக்கு உகந்த சூரிய மின்சக்தியை அமைக்க மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.



