கோவை மாவட்டம் பன்னிமடை ஊராட்சி முன்னாள் தலைவரும், அதிமுக முன்னாள் மாவட்ட கவுன்சிலருமான கவி சரவணகுமாரின் மனைவி மகேஸ்வரி (47) கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது கணவர் கவி சரவணகுமாரே கூலிப்படையை வைத்து கொலை செய்தது போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
கடந்த மாதம் 28 ஆம் தேதி, பன்னிமடைப் பகுதியில் உள்ள மகேஸ்வரியின் வீட்டில், அவர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். ஆரம்பத்தில், அவரது 15 ஆண்டுகால டிரைவராக பணிபுரிந்த சுரேஷ் என்பவர் தடாகம் காவல் நிலையத்தில் சரணடைந்து, மகேஸ்வரி திட்டியதால் அவரை கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்தார்.
ஆனால், கொலை நடந்த நேரத்தில் வீட்டின் சி.சி.டி.வி. கேமராக்கள் அணைக்கப்பட்டிருந்தது மற்றும் டிரைவரின் வாக்குமூலத்தின் நம்பகத்தன்மை குறித்து சந்தேகம் எழுந்தது. மேலும், மகேஸ்வரியின் உறவினர்கள் கணவர் கவி சரவணகுமார் மீது சந்தேகம் எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே, டிரைவர் சுரேஷை கைது செய்து சிறையில் அடைத்த காவல்துறையினர், நீதிமன்ற காவலில் எடுத்து அவரை விசாரித்தனர். அப்போது, சுரேஷின் கால் ஹிஸ்டரியை ஆய்வு செய்ததில், கொலை நடப்பதற்கு சற்று நேரத்திற்கு முன்பு அவர் தனது முதலாளியான சரவணகுமாருடன் தொலைபேசியில் பேசியது உறுதியானது.
விசாரணையின் முடிவில், “சரவணகுமாரே தனது மனைவியை கொலை செய்ய சொன்னார். ‘என்ன பிரச்னை வந்தாலும் நான் பார்த்துக்கொள்கிறேன்; வழக்கிற்கான செலவு, திண்டுக்கல்லில் வீடு என அனைத்தையும் நான் பார்த்துக்கொள்கிறேன்’ என்று ஆசை வார்த்தை கூறி தூண்டினார்” என்று சுரேஷ் வாக்குமூலம் அளித்தார்.
மேலும், சரவணகுமார் செங்கல் சூளை நடத்தி வந்ததுடன், வியாபாரம் என்ற பெயரில் பல மாவட்டங்களுக்குச் சென்று பல பெண்களுடன் தகாத உறவில் இருந்தது தெரியவந்தது. கடந்த 5 ஆண்டுகளாக அவர் வடவள்ளி பகுதியில் ஒரு பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாகவும், இதனால் மனைவியிடம் விவாகரத்து கோரியதாகவும், அதற்கு மகேஸ்வரி மறுத்ததாகவும் கூறப்படுகிறது.
இந்தக் கள்ளக்காதல் விவகாரமே கொலைக்குக் காரணம் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கொலைக்குப் பிறகு, சுரேஷ் வடவள்ளியில் மறைந்திருந்த கவி சரவணகுமாரை சந்தித்து, அவர் அறிவுறுத்தியதன் பேரில் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில், தடாகம் காவல்துறையினர் கவி சரவணகுமாரை கைது செய்து, கொலை வழக்கில் இரண்டாவது குற்றவாளியாக சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



