தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர், அரசியல் களம் கடும் பரபரப்பை சந்தித்து வருகிறது. தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று மாநிலத்தின் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆனால் ஆட்சியமைக்க தேவையான 118 உறுப்பினர்கள் என்ற பெரும்பான்மையை எட்ட முடியாததால், கூட்டணி மற்றும் வெளி ஆதரவைப் பெறும் முயற்சிகளில் தவெக தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
தேர்தல் முடிவுகள் வெளிவந்த உடனே காங்கிரஸ் கட்சி முதன்முதலாக தவெகவுக்கு ஆதரவு அளித்தது. இதனைத் தொடர்ந்து சிபிஎம், சிபிஐ, விசிக மற்றும் ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகளிடமும் ஆதரவு கோரப்பட்டது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) ஆகியவை தவெகவுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளது.
இதற்கிடையே, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நள்ளிரவில் முன்வைத்த குற்றச்சாட்டுகள் தமிழக அரசியலில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமமுக எம்.எல்.ஏ எஸ். காமராஜ் தவெகவுக்கு ஆதரவு கடிதம் வழங்கியதாக தகவல் வெளியான நிலையில், அது போலி என அமமுக தரப்பு குற்றம்சாட்டியது. இதற்கு பதிலாக தவெக தரப்பு வீடியோ வெளியிட்டு, காமராஜ் தன்னிச்சையாக ஆதரவு அளித்ததாக விளக்கம் அளித்தது.
இதுகுறித்து சென்னை அடையாற்றில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். “காரில் அமர்ந்து காமராஜர் கையெழுத்திட்ட போது வீடியோ எடுத்தது யார்? திமிரிலும் வன்மத்திலும் தவெகவினர் அந்த வீடியோவை வெளியிட்டுள்ளனர்.. ஆட்சி ஆதரவு என கூறப்படும் கையெழுத்தின் அசல் ஆவணம் எங்கே எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
“எங்கள் எம்.எல்.ஏ ஆதரவு அளித்திருந்தால் அவரை ஆளுநர் மாளிகைக்கு அழைத்து செல்லாதது ஏன்? கூட்டணிக்குள் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் தனது ஒப்புதலுடன் கடிதம் கொடுக்கப்பட்டதாக தவறான தகவல் பரப்பப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், “விஜய் எனக்கு மாமனா..? மச்சானா..? நாங்கள் ஏன் தவெகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்?” எனக் கேள்வி எழுப்பிய அவர், தவெகவினர் தன்னை மிரட்டவும் பயமுறுத்தவும் முயற்சிப்பதாகவும் குற்றம்சாட்டினார்.
அதேசமயம் தவெக வெளியிட்ட வீடியோ “ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டது” எனவும் அவர் கூறினார். “108 இடங்களில் வெற்றி பெற்றால் எனக்கு என்ன பயம்? மக்கள் உண்மையை புரிந்து தவெகவுக்கு உரிய பாடம் புகட்டுவார்கள்” என டிடிவி தினகரன் கடுமையாக தெரிவித்தார்.
Read more: தவெகவுக்கு ஆதரவா..? விசிக அலுவகத்திற்கு வந்த புதிய சோபா.. விறுவிறுப்பாக தயாராகும் அலுவலகம்..!



