தினசரி நடைப்பயிற்சி செய்து அலுத்துவிட்டதா? உடல் எடையை குறைக்கவும், ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் ஒரு சுலபமான, ஆனால், அதிக பலன் தரக்கூடிய மாற்றத்தை விரும்புகிறீர்களா? அப்படியானால், உங்கள் வழக்கமான நடைபயிற்சியில் ஒரு சிறிய மாற்றம் போதும். அதுதான், பின்னோக்கி நடப்பது. அறிவியலாளர்கள் இதனை ரெட்ரோ வாக்கிங் (Retro Walking) என்று அழைக்கிறார்கள். இது உடலுக்கு மட்டுமல்ல, மூளையின் செயல்பாட்டிற்கும் ஒரு சிறந்த பயிற்சியாகக் கருதப்படுகிறது.
பின்னோக்கி நடப்பதன் மூலம் நம் கால்களின் திசையை மட்டும் நாம் மாற்றுவதில்லை, மாறாக நம் உடல் மட்டுமின்றி நரம்புகளின் செயல்பாட்டையும் ஒருசேர தூண்டுகிறோம் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். ‘International Journal of Health Sciences’ என்ற மருத்துவ இதழில் வெளியான ஆய்வுகளின்படி, பின்னோக்கி நடப்பது மூட்டு வலிமை, தசை வலிமை, இதய ஆரோக்கியம் மற்றும் உடலின் சமநிலை ஆகியவற்றை மேம்படுத்துவது நிரூபிக்கப்பட்டுள்ளது.
ரெட்ரோ வாக்கிங், முன் தொடை தசைகள் மற்றும் கால் மூட்டுகளை சுற்றியுள்ள தசைகளுக்கு அதிக வேலை கொடுப்பதால், அவை வலிமை பெறுகின்றன. இதனால் மூட்டுப் பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம். முன்னோக்கி நடக்கையில் குதிகால் முதலில் தரையில் படும்போது மூட்டுகளில் ஏற்படும் அழுத்தம், பின்னோக்கி நடக்கையில் விரல்கள் முதலில் தரையில் படுவதால் குறைக்கப்படுகிறது.
மேலும், பின்னோக்கி நடக்கும்போது இடுப்புக்கு கீழான அனைத்து தசைகளும் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன. இதன் காரணமாக, முன்னோக்கி நடப்பதைவிட பின்னோக்கி நடக்கும்போது அதிக உழைப்பை இதயம் கொடுக்கிறது என்றும், இதனால் கலோரிகள் அதிகம் எரிக்கப்படுவதால் உடல் எடையைக் குறைக்க முயல்வோருக்கு இது சிறந்த பலனை தரும் என்றும் ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர்.
உடலுக்கு மட்டுமின்றி, பின்னோக்கி நடக்கையில் நம் மூளைக்கும் நாம் அதிகம் வேலை கொடுக்கிறோம். இதனால், கவனச்சிதறல் போன்ற பிரச்சினைகளைத் தடுக்க முடியும் என்றும், மூளையின் ஆரோக்கியம் மேம்படும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இது நாம் சுறுசுறுப்பாகவும், விழிப்புடனும் இயங்க உதவும். எனவே, உங்கள் நடைபயிற்சியை மேலும் பயனுள்ளதாகவும் சவாலானதாகவும் மாற்ற விரும்பினால், பின்னோக்கி நடக்கும் இந்தப் புதிய முயற்சியை மேற்கொள்ளலாம்.
Read More : அதிர்ஷ்டம் உங்களை தேடி வரணுமா..? சனிக்கிழமை தோறும் இந்த வழிபாட்டை மறக்காமல் பண்ணுங்க..!!



