சென்னையில் மனைவி இல்லாத நேரத்தில் ஏற்பட்ட ஒரு பழக்கம், மருந்து விற்பனை பிரதிநிதிக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. கீழ் வீட்டில் வசித்த பெண்ணுடன் செல்போனில் பேசியதைப் பயன்படுத்தி, அவரை மிரட்டி ரூ.5 லட்சம் பணம் பறிக்க முயன்றதாக 3 பெண்கள் உள்ளிட்ட 5 பேரை சூளைமேடு போலீசார் கைது செய்துள்ளனர். சூளைமேடு பகுதியைச் சேர்ந்த சுதர்சன் (32), மருந்து விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வருகிறார். அவருக்கு சுமார் 6 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றுள்ளது. ஆடி மாதத்தை முன்னிட்டு அவரது மனைவி தாய் வீட்டுக்குச் சென்றதால், சுதர்சன் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
அந்த சமயத்தில் கீழ் வீட்டில் வசித்து வந்த நமீதா (22) என்பவருடன் சுதர்சனுக்கு அறிமுகம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் செல்போனில் பேசி வந்ததாக கூறப்படுகிறது. சுதர்சன் நெருக்கமாக பேசிய உரையாடல்களை நமீதா பதிவு செய்து வைத்துள்ளார். இந்த ஆடியோ பதிவுகளை வைத்து சுதர்சனை மிரட்டி பணம் பறிக்க நமீதா திட்டமிட்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதற்காக தனது தோழி மோனிகா, அவரது கணவர் பாலகிருஷ்ணன், நண்பர் கணேஷ் மற்றும் மற்றொரு தோழி சிவரஞ்சனி ஆகியோரின் உதவியை நாடியுள்ளார்.
திட்டமிட்டபடி சுதர்சனை வீட்டுக்கு வரவழைத்த 5 பேரும், அவர் பேசிய ஆடியோ பதிவுகளை வைத்துக்கொண்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. இதற்காக ரூ.5 லட்சம் பணம் கேட்டு வற்புறுத்தியதுடன், அவரை தாக்கியதாகவும் போலீசில் அளிக்கப்பட்ட புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நமீதாவின் வீட்டு வாடகை உள்ளிட்ட செலவுகளையும் சுதர்சனே ஏற்க வேண்டும் என்று அவர்கள் கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த சுதர்சன், நடந்த சம்பவம் குறித்து தனது மனைவியிடம் தெரிவித்துள்ளார். கணவருக்கு ஆதரவாக இருந்த அவர், சுதர்சனை அழைத்துக்கொண்டு சூளைமேடு காவல் நிலையத்துக்குச் சென்று புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு, நமீதா, மோனிகா, பாலகிருஷ்ணன், கணேஷ் மற்றும் சிவரஞ்சனி ஆகிய 5 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
Also Read: 45 வயதில் 26 வயது வாலிபருடன் உல்லாசம்.. மகனுக்குத் தெரியவந்ததால் அரங்கேறிய கொடூரம்!



