மழைக்காலம் இனிமையான அனுபவங்களை தந்தாலும், வீட்டை பராமரிப்பதில் அது அதிக வேலைப்பளுவை உண்டாக்குகிறது. வீட்டைச் சரியாகச் சுத்தம் செய்யாவிட்டால், கிருமிகளின் பெருக்கமும், ஆரோக்கிய பிரச்சனைகளும் அதிகரிக்கும். பொதுவாக, வீடுகளில் இருக்கும் பெண்களே இந்த மழைக்காலப் பராமரிப்புச் சவால்களை அதிகமாக எதிர்கொள்கின்றனர். எனவே, மழைக்காலத்தில் வீட்டைத் திறம்படப் பராமரிப்பதற்கான சில எளிய மற்றும் அத்தியாவசிய வழிமுறைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
மழை காலத்தில் கூரை, கதவுகள், ஜன்னல்கள் வழியாக மழைநீர் வீட்டிற்குள் கசிவது பெரிய பிரச்சனையாகும். இதைத் தவிர்க்க, வீட்டின் மேல் மற்றும் சுற்றுச் சுவர்களில் உள்ள விரிசல்களை உடனடியாக கண்டறிந்து, பாலியூரிதீன், சிமெண்ட் அல்லது தெர்மோபிளாஸ்டிக் போன்ற நீர் புகாத பொருட்களைப் பயன்படுத்திச் சீர்செய்வது அவசியம்.
வீட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் அடைபட்டிருக்கும் வடிகால்களில் (Drains) கிருமிகள் இனப்பெருக்கம் செய்வதைத் தடுக்க, அவற்றை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். அடைப்புகள் இருந்தால், ஒரு கப் பேக்கிங் சோடா, ஒரு கப் உப்பு மற்றும் ஒரு கப் வெள்ளை வினிகர் ஆகியவற்றைக் கலந்து வடிகாலில் ஊற்றி, 15 நிமிடம் கழித்துக் கொதிக்கும் நீரை ஊற்றுவதன் மூலம் குழாய்களை முழுமையாகச் சுத்தப்படுத்தலாம்.
ஈரமான மற்றும் பூஞ்சை காளான் உள்ள பகுதிகளில் பூச்சிகள் மற்றும் ஈக்கள் வேகமாக இனப்பெருக்கம் செய்யும் என்பதால், மழைக்காலங்களில் சமையலறை அலமாரிகள், சுவர்கள் மற்றும் தரைகள் போன்ற உட்புற பகுதிகளை அடிக்கடி சுத்தம் செய்வது நல்லது. ஈரப்பதத்தையும் கிருமிகளையும் தடுக்க, டிராயர்கள் மற்றும் அலமாரிகளில் கற்பூரம், நாப்தலீன் பந்துகள் அல்லது கிராம்பு, வேப்ப இலைகள் போன்ற இயற்கை பொருட்களை பயன்படுத்தலாம். மேலும், உணவுகள் விரைவில் கெட்டுப்போகாமல் இருக்க, அலமாரிகளை காற்றோட்டமாக வைத்திருப்பதுடன், உணவுப் பொருட்களை பிளாஸ்டிக்கிற்கு பதிலாக காற்று புகாத கண்ணாடி கொள்கலன்களில் போட்டு வைப்பது பாதுகாப்பானது.
மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பு ஒரு எலெக்ட்ரீஷியனை கொண்டு வீட்டில் உள்ள ஒவ்வொரு மின் இணைப்பையும் முழுமையாக ஆய்வு செய்து சரிசெய்வது, விபத்துகளைத் தவிர்க்க உதவும். ஜெனரேட்டர் அறை, இன்வெர்ட்டர் யூனிட் மற்றும் MCB பெட்டிகளில் நீர் கசிவுகள் உள்ளனவா என்பதையும் உறுதி செய்ய வேண்டும்.
மேலும், மழைக்காலத்தில் அழுக்கு மற்றும் பாக்டீரியாவுடன் வரும் பாதங்கள் வீட்டுக்குள் பரவுவதைத் தடுக்க, பிரதான வாசலில் ரப்பர், மைக்ரோஃபைபர், அல்லது பாலியஸ்டர் போன்ற பொருட்களால் செய்யப்பட்ட கால் மிதியடிகளை பயன்படுத்துவது, வீட்டின் சுகாதாரத்தைப் பேணிக்காக்க உதவும்.



