இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (SBI), தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கியமான சேவை மாற்றத்தை அறிவித்துள்ளது. எஸ்பிஐ-யின் ஆன்லைன் வங்கிச் சேவை தளமான OnlineSBI மற்றும் மொபைல் செயலியான YONO Lite ஆகியவற்றில் கிடைக்கும் mCASH எனப்படும் உடனடிப் பணப் பரிமாற்ற சேவை, வரும் டிசம்பர் 1 முதல் நிரந்தரமாக நிறுத்தப்பட உள்ளது.
இந்த mCASH சேவை, வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கு விவரங்கள் தேவையில்லாமல், பெறுநரின் மொபைல் எண் அல்லது மின்னஞ்சல் முகவரியை மட்டும் பயன்படுத்திப் பணம் அனுப்பும் வசதியை வழங்கியது. பணம் பெறுபவர், வங்கிக் கணக்கு மற்றும் IFSC குறியீட்டை உள்ளிட்டு, கடவுச்சொல் (Passcode) மூலம் பணத்தைத் தங்களின் கணக்கிற்கு மாற்றி வந்தனர். நவம்பர் 30ஆம் தேதிக்கு பிறகு இந்தச் சேவை நீக்கப்படுவதால், இனி வாடிக்கையாளர்கள் இந்தப் பழமையான முறையில் பணம் அனுப்பவோ அல்லது பெறவோ முடியாது.
mCASH சேவை நிறுத்தப்பட்டாலும், வாடிக்கையாளர்களுக்கு எந்தச் சிக்கலும் இருக்காது. பணம் அனுப்ப தற்போது பரவலாகப் பயன்பாட்டில் உள்ள மற்றும் மிகவும் பாதுகாப்பான டிஜிட்டல் முறைகளான UPI, NEFT, RTGS போன்றவற்றை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தலாம் என்று எஸ்பிஐ கேட்டுக் கொண்டுள்ளது. டிசம்பர் 1-ம் தேதிக்கு முன்னர் mCASH பயனாளர்கள் அனைவரும், இந்த நவீன மற்றும் பாதுகாப்பான பரிமாற்ற வழிகளுக்கு மாற வேண்டும் என்று வங்கி அறிவுறுத்தியுள்ளது.



